விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றியவர் சுப்பிரமணியன். இவர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர், ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.
இந்நிலையில், மே 31ஆம் தேதி இவரது பதவிக்காலம் நிறைவடைந்தது. ஆனால் ஊரக வளர்ச்சித் துறையில் தவறான பயனாளிகளை பரிந்துரை செய்ததாகக் கூறி ஓய்வுபெறும் நாளில் அவரை தற்காலிக பணிநீக்கம் செய்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானம் உத்தரவிட்டார்.
இதனையடுத்து, ஜாக்டோ- ஜியோ அமைப்பை ஒருங்கிணைத்து பல கட்ட போராட்டங்களை நடத்தி அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற போராடியவர் சுப்பிரமணியன் என்றும், இவரைப் பழிவாங்கும் நடவடிக்கையாக ஓய்வு நாளன்று தற்காலிக பணிநீக்கம் செய்து அரசு மிரட்டுவதாகவும் கூறி, நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 200-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி, சுப்பிரமணியனின் மீதான பணி இடைநீக்க உத்தரவை திரும்பப்பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.