மயிலாடுதுறை: ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் தீர்த்தவாரி பல்வேறு பக்தர்களுடன் வெகுவிமரிசையாக நடைபெற்றது. மயிலாடுதுறையில் நடைபெறும் காவிரி துலா உற்சவம் மிகவும் புகழ்பெற்றதாகும். கங்கை, யமுனை, சரஸ்வதி உள்ளிட்ட அனைத்து நதிகளில், பக்தர்கள் புனித நீராடி அவர்களின் பாவங்களைப் போக்கிக் கொள்வது இந்துமதத்தின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. இப்படி மனிதர்களின் பாவங்களைப்பெரும் புனித ஆறுகள் அதன் புனிதத்தை எவ்வாறு மீட்டெடுக்கும் என்பதற்கு இந்துமதத்தின் நம்பிக்கையாளர்களால் பல்வேறு புராணக்கதைகள் கூறப்பட்டு வருகின்றன.
நதிகள் அனைத்தும் அதன் புனிதத்தை திரும்பப்பெற சிவபெருமானை வேண்டி, ஐப்பசி மாதமுள்ள 30 நாள் முழுவதும் காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி சிவபெருமானின் அருளால் அதன் புனிதத்தை திரும்பபெறுகின்றன என்று இறைப்பற்றாளர்களால் இன்றளவும் நம்பப்பட்டு வருகிறது. நதிகள் அனைத்தும் மயிலாடுதுறை காவிரியில் புனித நீராடி சிவபெருமானை வழிபட்டு தங்களின் பாவச் சுமைகளைப் போக்கி கொண்டதால், அப்பகுதியில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் வரும் 30 நாட்களும் மயிலாடுதுறையில் காவிரிதுலா உற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மயில் உருவில் சிவனை பூஜித்து சாப விமோசனம் அடைந்த மாயூரநாதர் ஆலயம் மற்றும் வதான்யேஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களில் கொடியேற்றம் செய்யப்பட்டு 10 நாள் உற்சவம் பல்வேறு பூஜைகளுடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்து மதப்புராணங்களின்படி, ஐப்பசி மாத அமாவாசை தினத்தில் கங்கைக்கு மாயூரநாதர் சுவாமிகளும், மேதா தட்சிணாமூர்த்தியும் காட்சியளித்தாக கூறப்படுகின்றது.
இதனை முன்னிட்டு மயிலாடுதுறையில் உள்ள புகழ்பெற்ற சிவாலயங்களில் இருந்து அம்பாள் புறப்பட்டு காவிரியில் அமாவாசை தீர்த்தவாரி வழங்குவது வழக்கம். அதைத்தொடர்ந்து இன்று(நவ.13) ஐப்பசி அமாவாசையை முன்னிட்டு, திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அயபாம்பிகை சமேத மாயூநாதர் சுவாமி, அறம்வளர்த்த நாயகி சமேத அய்யாறப்பர் சுவாமி, தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான படித்துறை, விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர் சுவாமி, தெப்பக்குள காசிவிஸ்வநாதர், ஐப்பசிமாத அமாவாசையொட்டி வதானேஸ்வரர் கோயிலில் இருந்து கங்கை அம்மன் சமேத மேதா தட்சிணாமூர்த்தி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காவிரிக்கரைக்கு எழுந்தருளினார்.
பின்னர் அஸ்திரதேவருக்கு இரண்டு கரைகளிலும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில், திருவாவடுதுறை தருமபுரம் ஆதீனங்களின் கடட்டளை தம்பிரான்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். இன்று(நவ.13) இரவு திருவாவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மாயூரநாதர் கோயில் மற்றும் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வள்ளலார் கோயில் என்று அழைக்கப்படும் வதானீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.
அதனைத் தொடர்ந்து 15 ஆம் தேதி ஒன்பதாம் நாள் திருவிழாவான தேரோட்டம் மற்றும் பத்தாவது திருவிழாவான 16ஆம் தேதி கடைமுக தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. மேதா தட்சிணாமூர்த்தி சுவாமி ஆண்டுக்கு ஒருமுறை ஐப்பசி (துலா) மாத அமாவாசை அன்று ஒருநாள் மட்டும் வீதியுலாவாக வந்து காவிரியில் எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி பக்தர்களுடன் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இதையும் படிங்க: சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது!