மயிலாடுதுறை மாவட்டம், அருகேயுள்ள மேலப்பட்டமங்கலம் ஈ.பி.காலனியைச் சேர்ந்தவர் அருள் (34). இவர் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை மயிலாடுதுறை சீனிவாசபுரம் பழைய ரயில்வே சாலையில் குமார் என்பவரின் கீற்றுக்கொட்டகையில், தலையில் 3 இடங்களில் வெட்டப்பட்டு இறந்து கிடந்தார்.
இதைக் கண்ட அப்பகுதியினர் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அருளின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இதுதொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், படுகொலை செய்யப்பட்ட அருள் ஏற்கெனவே 2013ஆம் ஆண்டு நெப்போலியன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அருளின் சகோதரர் ரஜினி அளித்த புகாரின் பேரில், முன்விரோதம் காரணமாக இக்கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையின் முடிவில், நெப்போலியனின் சகோதரரான பாலகிருஷ்ணன் (22), அவரது நண்பர்களான முட்டம் கனிவண்ணன் (27), திருவிழந்தூர் சூர்யா(23) ஆகியோருக்கு இக்கொலையில் தொடர்பிருப்பதும், 2013ஆம் ஆண்டு நெப்போலியன் கொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாகவும், பாலகிருஷ்ணனின் தந்தை நல்லதம்பி ஊர் குளத்தினை குத்தகைக்கு வைத்திருந்ததை அருள் குத்தகைக்கு எடுக்க முயற்சித்ததால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகவும் கொலை நடைபெற்றதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, மூன்று பேரையும் கைது செய்த காவல் துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: திமுக பிரமுகர் வெட்டிக்கொலை: பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு!