மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் வாசுகி நாகம் வழிபாடு செய்த சௌந்தரநாயகி சமேத நாகநாதசாமி திருக்கோயில் அமைந்துள்ளது.
நவக்கிரக ஸ்தலங்களில் கேது ஸ்தலமான இங்கு, கேது பகவானுக்கு தனி சந்நிதி உள்ளது. பலவர்ணங்களை உடையவராக கருதப்படும் கேது பகவான் நவக்கிரகங்களில் ஞானத்தை அளிப்பவராவார். இவர் மனக்கோளாறு, தோல் வியாதிகள், புத்திரதோஷம், சர்ப்பதோஷங்களை அளிக்கவல்லவர்.
கேது பகவானுக்கு கொள்ளு தானியத்தை கீழே பரப்பி, அதில் தீபமிட்டு வணங்கினால் கேது பகவானால் ஏற்படும் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். தமிழ்நாட்டில் கேது பகவானுக்குத் தனி சந்நிதி கீழப்பெரும்பள்ளம் நாகநாதசாமி கோயிலில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
கேது விருட்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இன்று (மார்ச் 21) பிற்பகல் 3.14 மணிக்கு பெயர்ச்சியடைந்தார். முன்னதாக நாகநாதசாமி கோயிலில் சிறப்பு யாகம் செய்யப்பட்டது. பால், சந்தனம், பஞ்சாமிர்தம், தேன், மஞ்சள் உள்ளிட்டப் பல்வேறு அபிஷேகங்களும் நடைபெற்றன.
![நாகநாத சாமி கோயிலில் கேது பெயர்ச்சி விழா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14792439_kee.jpg)
அதனைத்தொடர்ந்து யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட கடங்கள், மங்கள வாத்தியம் முழங்க புறப்பாடு செய்யப்பட்டு, கேது பகவானுக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்து பிற்பகல் 3.14 மணிக்கு மஹாதீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கேது பகவானை வழிபட்டனர்.
இதையும் படிங்க: ஈரோடு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை!