நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் ஈஸ்டர் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது. இரவு ஈஸ்டர் திருநாளையொட்டி ஏசு உயிர்ப்புப் பெருநாள் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றன. இதையடுத்து வேளாங்கண்ணி பேராலய கலை அரங்கத்தில் ஈஸ்டர் திருநாள் பிரார்த்தனைகள் தொடங்கின.
இதன் தொடக்கத்தில் பாஸ்கா திருவிழிப்புச் சடங்கு நடந்தது. இதில் ஏசு உயிர்த்தெழுவதை உணர்த்தும் வகையில் ‘பாஸ்காஒளி’ ஏற்றப்பட்டது. கலை அரங்க வளாகத்தின் மையப்பகுதியிலிருந்து ஏற்றப்பட்ட பாஸ்கா ஒளியைப் பேராலய அதிபர் பிரபாகர் அரங்கத்தின் மேடைக்கு எடுத்துச் சென்றார். பின்னர் பிரார்த்தனைகள் தொடங்கின.
இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு கையில் மெழுகுவர்த்தியை ஏந்தியபடி பிரார்த்தனைசெய்தனர். இரவு 12 மணியளவில் வாணவேடிக்கை, மின்னொளி அலங்காரத்துடன் பேராலய கலையரங்கத்தின் மேற்கூரையில் சிலுவைக் கொடியைக் கையில் தாங்கிய ஏசு கிறிஸ்து உயிர்த்தெழும் காட்சி தத்ரூபமாகத் நிகழ்த்தி காண்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.