நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள திருவாவடுதுறையில் 14ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சைவ ஆதீன மடம் உள்ளது. இந்த மடத்திற்குச் சொந்தமாக தமிழ்நாடு மட்டுமின்றி, காசி உள்பட இந்தியாவின் பல்வேறு இடங்களில் ஆலயங்களும், கிளை மடங்களும் உள்ளன. இந்த மடத்தின் கட்டுப்பாட்டிலுள்ள திருவிடைமருதூர் மகாலிங்க சாமி ஆலயத்தில் கட்டளைத்தம்பிரான் சாமியாக இருந்தவர் ஸ்ரீமத் சாமிநாத தம்பிரான்.
இவர், உடல்நிலை சரியில்லை என்று ராஜினாமா செய்ததாகக் கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஆதீனம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இவருக்கு வழங்கப்பட்ட காவி உடை மற்றும் உத்திராட்சம் உள்ளிட்ட சைவ சின்னங்கள் பறிக்கப்பட்டன. இது குறித்து ஆதீனம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், 'ஸ்ரீமத் சுவாமிநாத தம்பிரான். ஆதீன மரபுகளை மீறியுள்ளார் இதனால் இவருடன் யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், காவி உடை இல்லாமல், வெள்ளை உடையில் கட்டளைத்தம்பிரான் இருக்கும் புகைப்படம் ஆதீனம் சார்பில் வெளியானது.
இந்நிலையில், பதவி நீக்கம் செய்யப்பட்ட கட்டளைத்தம்பிரான், காசி சென்று அங்கிருந்து, மீண்டும் காவி உடை அணிந்தபடி, ஆடியோ ஒன்றை வாட்ஸ் அப்பில் வெளியிட்டிருந்தார். அந்த ஆடியோவில், 'திருவாவடுதுறை ஆதீனம் வெள்ளை வேஷ்டிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தன்னை கட்டாயப்படுத்தி வெளியேற்றியுள்ளனர் என்றும் ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிகர், மௌனகுருவாக மாறிவிட்டார்; எனவும் மிகக் கடுமையாக குற்றம்சாட்டி பேசியிருந்தார். இந்த வாட்ஸ் அப் ஆடியோ விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனைத்தொடர்ந்து, இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் விதமாக திருவாவடுதுறை 24ஆவது ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிகர் இன்று ஆதீன மடத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பதவி நீக்கம் செய்யப்பட்ட கட்டளைத்தம்பிரான், ஈரோட்டைச் சேர்ந்தவர். அவர், தீட்சை பெறுவதற்கு முன்பே ஊமைப்பெண்ணை திருமணம் செய்துள்ளார். மடத்தில் இருந்தாலும், அவ்வப்போது வீட்டிற்கு சென்று வந்தார்.
முழுமையாக துறவறம் மேற்கொள்ளாமல் உடல்நிலை சரியில்லை என்று கூறிவந்தார். இதனால், அவரது ஊரைச்சார்ந்த சிலரை நேரில் வரவழைத்து விசாரித்து, அவரை வெளியேற்றினோம். ஆதீனத்தின் கட்டளையை மதிக்காமல் காசி சென்று மீண்டும் காவி உடை அணிந்து குருத்துரோகம் செய்துவிட்டார் என்றும் அவர் தெரிவித்தார். மிகவும் பழமையான இந்த ஆதீனத்தில் துறவிகள் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி பேசிவருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.