மயிலாடுதுறை: புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாற்றில் உலகப்புகழ் பெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயில் அமைந்துள்ளது. இது சனிபகவானுக்கு உரிய பரிகாரத் தலமாகத் திகழ்கிறது. மேலும் இது நவக்கிரக கோயில்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.
தர்ப்பை அடர்ந்து வளர்ந்திருந்த காரணத்தால், இந்த பகுதி தர்ப்பாரண்யம் என்று முதலில் வழங்கப்பட்டது. பின்னர் நகவிடங்கபுரம் என்றும் பெயர் பெற்றது. இங்கு அமர்ந்து இருக்கும் ஈசனின் திருப்பெயர் தர்ப்பாரண்யேஸ்வரர். அம்பிகையின் திருப்பெயர் பிராணேஸ்வரி. நளமகாராஜனை, சனிபகவானின் பீடிப்பிலிருந்து விடுவித்து, மறுபடியும் வளமான வாழ்க்கைக்கு ஆற்றுப்படுத்திய தலம் இது என்பதால், நள்ளாறு என அழைக்கப்படுகிறது.
சுயம்புவாக தர்ப்பைவனத்தில் தோன்றியதால் ஈசன் தர்ப்பைத் தழும்புகளுடன் காட்சி தருகிறார். இக்கோயில் 9ஆம் நூற்றாண்டில் சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாகும். சிவ பெருமானின் பாடல் பெற்ற தலங்களில் இதுவும் ஒன்று. சம்பந்தர், சுந்தரர், அப்பர், அருணகிரிநாதர் ஆகியோர் இத்தல சுவாமி பற்றி பாடி உள்ளனர். இத்தலத்தில் நள தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், வாணி தீர்த்தம் தவிர, அஷ்டதீர்த்தங்கள் எனப்படும் மொத்தம் 8 தீர்த்தங்கள் உள்ளன.
விஷ்ணு, பிரம்மன், இந்திரன், அஷ்டதிக்கு பாலகர்கள், அகத்தியர், அர்ஜுனன், நளன் உள்ளிட்ட பலரும் வழிபட்ட ஈசன் இவர். சப்தவிடங்கத் தலங்களில் திருநள்ளாறும் ஒன்று. பல்வேறு சிறப்புகள் பெற்ற திருநள்ளாறில் உள்ள புகழ் பெற்ற ஸ்ரீ சனீஸ்வர பகவான் கோயிலில் சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு, இன்று மாலை 5.20 மணிக்கு ஸ்ரீ சனீஸ்வர பகவான், மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார்.
இந்த நிலையில் சனிப்பெயர்ச்சி விழாவில் சாமி தரிசனம் செய்வதற்காக வெளி மாவட்டம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். பாதுகாப்பு பணிகளுக்காக காரைக்கால் மற்றும் திருநள்ளாறு பகுதியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் கோயில் முழுவதும் 200க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா மற்றும் ட்ரோன் கேமரா மூலமாக கண்காணித்து வருகின்றனர். மேலும், சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுவதையொட்டி, காரைக்கால் பேருந்து நிலையத்திலிருந்து திருநள்ளாறுக்கு இன்று காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை பக்தர்களின் வசதிக்காக இலவசப் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.