நாகை, திருவாரூர் ,தஞ்சை ஆகிய டெல்டா மாவட்ட விவசாயிகள் ,கடந்த மூன்று ஆண்டுகளாக மத்திய அரசின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்த தொகைக்கான இழப்பீடு தொகை இதுவரை கிடைக்காத காரணத்தால், கடும் சிரமத்தை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர் .பாண்டியன் தலைமையில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் இன்று நாகையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பி.ஆர். பாண்டியன் கூறியதாவது, பல கட்ட போராட்டங்களை விவசாயிகள் நடத்திய நிலையிலும் டெல்டா மாவட்டங்களை சேர்ந்த 80 சதவிகித விவசாயிகளுக்கு இதுவரை பயிர் காப்பீட்டுக்கான இழப்பீட்டு தொகை வரவில்லை. பயிர் காப்பீட்டு திட்டத்தை மத்திய அரசு தனியாரிடம் வழங்கியதன் காரணமாக இழப்பீட்டு தொகை வழங்குவதற்கு காலம் கடத்துகின்றனர்.
தனியார் நிறுவனங்கள் விவசாயிகளின் பணத்தை மோசடி செய்து வருகின்றது. எனவே, விவசாயிகளின் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வரும் பயிர் காப்பீட்டு நிறுவனங்களை கண்டித்து வருகின்ற ஏப்ரல் 2 ஆம் தேதி சென்னையில் உள்ள மண்டல காப்பீட்டு நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.