நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே மங்கைநல்லூர் - எடக்குடி மெயின் ரோடு பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் கடந்த 30 ஆண்டுகளாக ஜெய்சங்கர் - ஜான்சிராணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள், கடந்த பத்தாண்டுகளாக வீட்டு வரி கட்டிவருகின்றனர். மேலும், அரசு பட்டா வழங்கக்கோரி மனு அளித்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், கடந்தாண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இவர்கள் ஆளுங்கட்சியினருக்கு வாக்களிக்கவில்லை என்று கூறுப்படுகிறது. இதனால், ஆளுங்கட்சியினர் நிர்பந்தம் காரணமாக ஜெய்சங்கர் - ஜான்சிராணி குடியிருக்கும் வீட்டை காலி செய்ய வேண்டும் என கிராம நிர்வாக அலுவலர் கலையரசி, வருவாய் ஆய்வாளர் குமார் ஆகியோர் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
கடந்த இரண்டு தினங்களாக கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் உடனடியாக வீட்டை காலி செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றனர். கரோனா ஊரடங்கு நேரத்தில் வீட்டு வாடகை கூட வசூலிக்கக் கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், 30 ஆண்டுகளாக குடியிருக்கும் வீட்டை உடனடியாக காலிசெய்ய வற்புறுத்துவதால், தாங்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும், எனவே உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் தம்பதியினர் மனு அளித்தனர்.