மயிலாடுதுறை: சீர்காழி அடுத்த புளிச்சக்காடு பகுதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் புளிச்சக்காடு, தோட்ட மானியம், ஆலமரத்தடி, நித்தியவனம் ஆகிய பகுதிகளைச்சேர்ந்த சுமார் 18 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
பள்ளி தலைமை ஆசிரியராக ராகினி பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு இரண்டு மாணவ - மாணவிகளுக்கு உடல் உபாதை ஏற்பட்டது. தொடர்ந்து பள்ளி விடுமுறைக்குப் பின் இன்று (ஜூலை 18) பள்ளிக்கு வந்த மேலும் 5 மாணவ - மாணவிகள் மற்றும் தலைமை ஆசிரியைக்கு காய்ச்சல் இருந்தது.
இதுகுறித்து தகவலறிந்த சீர்காழி நகர மன்றத்தலைவர் துர்கா பரமேஸ்வரி தலைமையில் சுகாதாரத்துறையினர், நகராட்சி ஊழியர்கள் பள்ளிக்குச்சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து பள்ளியைச்சுற்றிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு குடிநீர் பரிசோதனைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
பள்ளியில் பயிலும் 18 மாணவ மாணவிகள், பள்ளி தலைமை ஆசிரியை, உதவி ஆசிரியை ஆகியோர் சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். மாணவ - மாணவிகளின் உடல்நலம் பாதிப்பிற்கு அவர் வீட்டில் சாப்பிட்ட உணவு காரணமா அல்லது குடிநீரால் பாதிப்பு ஏற்பட்டதா என விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: குரங்கம்மை நோய் தடுப்பு - விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்