நாகை மாவட்டம், மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் உள்ள வேளாண்மை விரிவாக்க மைய வளாகத்தில் ரூ. 1.7 கோடி செலவில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்திற்கான கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த மையத்திற்கு அருகில் சுமார் 25 வீடுகள் கொண்ட குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த குடியிருப்புப் பகுதிக்கு செல்லும் பொதுப்பாதையை ஆக்கிரமித்து கட்டிடப்பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறி குடியிருப்புவாசிகள், அங்கு பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்ட பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பொதுபாதையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டப்படுவதால், அவசர தேவைக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரசு அலுவலர்கள், காவல்துறையினர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும், பொதுப்பாதைக்கு பாதகம் வராத வகையில், கட்டடம் கட்டப்படும் எனவும் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.