தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் 25ஆம் தேதி நிவர் புயல், நவம்பர் 30ஆம் தேதி புரெவி புயல் தாக்கியது. புயல் காரணமாகப் பெய்த தொடர் மழையால் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிடுவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாகை வந்துள்ளார். நாகையில் தனியார் விடுதியில் தங்கியுள்ள முதலமைச்சரைச் சந்தித்துப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசு மனு அளித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசு, "இந்தாண்டு உரிய நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. அதன் காரணமாக குறுவை, சம்பா பயிர்கள் மூன்றரை லட்சம் அளவிற்குச் சாகுபடிசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பா நெற்பயிர் கதிர் விட்டும், கதிர் வரும் தருவாயில் புயலால் பெய்த தொடர் கனமழையில் ஆறுகள் தூர்வாரப்பட்டாலும், பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படாத காரணத்தால் வாய்க்கால்கள் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்கி நெல் மணிகள் பதராகும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதனால் விவசாயிகளைப் பாதுகாக்க கூடுதல் நிவாரணமாக ஏக்கருக்கு 32 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். அதேபோன்று குடிசை வீடுகளுக்கு 20 ஆயிரம் ரூபாயும், தொகுப்பு வீடுகளுக்கு 15 ஆயிரம் ரூபாயும், கரோனா, நிவர், புரெவி புயலால் வேலை இழந்துள்ள விவசாய தொழிலாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என முதலமைச்சரிடம் மனு அளித்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'வேளாண்மை செழிக்கட்டும்! சட்டங்கள் நொறுங்கட்டும்!' - ஸ்டாலின்