மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள பொறையார் குமரன் கோவில், அக்ரஹாரத் தெருவில் வசித்திருப்பவர், நாராயணசாமி. இவர் தனது வீட்டுக்கொல்லையில் பூவம், மொந்தன் மற்றும் ரஸ்தாளி உள்ளிட்ட வகையான வாழைமரங்கள் மற்றும் காய்கறிச்செடிகளை வீட்டுத் தேவைகளுக்காக வளர்த்து, பல ஆண்டுகளாகப்பாதுகாத்து வருகிறார்.
இந்த வாழை மரக்கன்றுகள் முற்றி, தற்போது மரமாக வளர்ந்துள்ள நிலையில், இதில் 10அடி உயரம் வளர்ந்த பூவம் ரகம் வகையைச்சேர்ந்த ஒரு வாழை மரமானது மரத்தின் நுனியில் தார் விடாமல், இடையே மரத்தின் நடுவில் தார் குலை தள்ளியுள்ளது.
பொதுவாக வாழைமரம் நுனியில் பூ பூத்து தார் விடுவது வழக்கம். ஆனால், இந்த வாழை மரத்தின் நடுப்பகுதியில் மரத்தைப் பிளந்து கொண்டு தார் விட்டுள்ளது, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அதாவது 5 அடி உயரத்திற்கு மரத்தின் நடுப்பகுதியில் பூவில் இருந்து காய்கள் காய்த்து தற்போது வாழைத்தாராக காட்சியளிக்கிறது. பொதுவாக வாழை மரங்கள் மேற்பகுதியில் இலைகளுக்கு இடையே இருந்தே மொட்டு வந்து குலை தள்ளும். ஆனால், மரத்தின் நடுவே குலை தள்ளிய இந்த அதிசய வாழையை பொதுமக்கள் வியப்புடனும் ஆச்சரியத்துடன் பார்த்துச்செல்கின்றனர்.
இதையும் படிங்க: அடுத்த 4 நாட்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!