நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தேவாரப்பாடல் பெற்ற அருள்மிகு அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு வரும் பக்தர்கள் யாகங்கள் செய்து அம்பாளை வழிபட்டால் ஆயுள் விருத்தி அடையும் என்பது ஐதீகம். இதனால் இத்தளத்திற்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து ஆயுஷ் ஹோமம் செய்து சுவாமி அம்பாள், காரம் சம்காரம் மூர்த்தியை வழிபட்டுச் செல்வது வழக்கம்.
இத்தகைய சிறப்புடைய இந்தக் கோயிலில் கரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களைக் காத்திட வேண்டி அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் சார்பில் சுவாமி சன்னதியில் வெள்ளி கவசத்தில் சுவாமி அம்பாளை ஆவாகனம் செய்து மிருத்தியஞ்ச ஹோமம், தன்வந்திரி ஹோமம், பஞ்சாட்சர ஹோமம் மற்றும் 81 விதமான பதமந்திரங்கள் சொல்லப்பட்டு 96 வகையான மூலிகைப் பொருள்களைக் கொண்டு மகா யாகம் நடைபெற்றது.
தருமபுரம் 27ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த யாகத்தை அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தைச் சேர்ந்த சிவாச்சாரியார்கள் நடத்திவைத்தனர்.
அப்போது மருத்துவம் மிருத்யுஞ்சய மகாமந்திரம் ஓதப்பட்டு வினை நோய் நீக்கும் என்ற திருஞானசம்பந்தரின் தேவாரம் பாடப்பட்டது. தொடர்ந்து கலசத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரைக் கொண்டு சுவாமி அம்பாளுக்கு திருமுழுக்கு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம்செய்தனர்.
இதையும் படிங்க: 'மக்கள் ஒத்துழைப்பு தந்தால் இந்தப் பேரிடரைச் சமாளிக்க முடியும்'