நாகப்பட்டினம் அடுத்த பால்பண்ணைச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணியன். இவர் ஓய்வு பெற்ற நடத்துநர். ஆண்டோ சிட்டி பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி, அவரது குடும்பத்தினர் சுப்ரமணியிடம் நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.
இந்நிலையில், ராஜேஸ்வரி தனக்கு பல கோடி ரூபாய் பணம் கிடைக்க உள்ளதாகவும், அதற்கு வருமானவரித்துறை அலுவலர்களுக்கு கையூட்டு கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதனை நம்பிய சுப்பிரமணியன் வருமானவரித்துறை அலுவரை அழையுங்கள், நான் பணம் தருகிறேன்; உங்களுக்கு பணம் கிடைத்தவுடன் திருப்பி கொடுங்கள் என்று கூறியுள்ளார்.
இதனைப் பயன்படுத்திய ராஜேஸ்வரி போலி வருமானவரித்துறை அலுவலர்களை ஏற்பாடு செய்து, நடத்துநர் சுப்ரணிமணியனிடம் 45 லட்சம் ரூபாய் வரை வாங்கியுள்ளனர். ஆனால், ராஜேஸ்வரி பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில் தலைமறைவானார்.
ஒருகட்டத்தில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுப்பிரமணியன் இது குறித்து நாகப்பட்டினம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், ராஜேஸ்வரி உள்ளிட்ட 9 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் ராஜேஸ்வரி தஞ்சையில் பதுங்கி இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்கு சென்ற தனிப்படை காவல் துறையினர் ராஜேஸ்வரியை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கள்ளத்தனமாக மது விற்ற பெண் கைது - 406 மது பாட்டில்கள் பறிமுதல்