நாகப்பட்டினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் கனமழை கொட்டித்தீர்த்தது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மயிலாடுதுறை அருகே உளுத்துக்குப்பை ஜி.என்.நகரில் வசிக்கும் செல்வம் என்பவரின் ஓட்டுவீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து அருகில் உள்ள கூரைவீட்டின் மீது விழுந்தது. இதனால் கூரை வீடு சேதமடைந்து அங்கு தூங்கிக்கொண்டிருந்த செல்வத்தின் அக்கா மல்லிகாவுக்கு காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, அவர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்பகுதியில் 30 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட 22 காலனி வீடுகள் உள்ளதாகவும், வீடுகள் அனைத்தும் இடியும் தருவாயில் உள்ளதாகவும் அரசு தங்களுக்கு புதிதாக வீடுகள் கட்டித்தர வேண்டுமெனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல், மயிலாடுதுறை மணல்மேடு அருகே பூதங்குடி ஊராட்சி கிடாரங்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்த தமிழரசி என்பவரின் காலனி வீடு மழையின் காரணமாக இடிந்து விழுந்தது. இதில், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தமிழரசி, அவரின் மருமகள்கள் சத்யா, சுகன்யா ஆகிய மூவர் காயமடைந்து சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கனமழையால் வேளாங்கண்ணி செபஸ்தியார் நகரின் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. வேளாங்கண்ணி பேரூராட்சியின் பாதாள சாக்கடை திட்ட பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ள காரணத்தால் மழைநீர் வடிய வடிகால் இல்லாமல் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் மழைநீர் குளம்போல தேங்கி காட்சியளிக்கிறது. இதனால் அவதிப்படும் மக்கள் இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:
அன்புக்கு மதம் தடையில்லை - கோயில் யானை இறப்புக்கு மரியாதை செலுத்திய இஸ்லாமியர்!