பாரம்பரியமிக்க நெல் ரகங்கள் சுமார் 1500க்கும் மேற்பட்டவை கண்டறியப்பட்டுள்ளன. இவற்றை அனைத்து விவசாயிகளுக்கும் கொண்டு செல்லும் நோக்குடன் கிரியேட் நமது நெல்லை காப்போம் இயக்கம் சார்பில் தேசிய நெல் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தொடங்கிய தேசிய நெல் திருவிழா தமிழ்நாடு முழுவதும் 7 மாவட்டங்களில் நடத்தப்பட்டு இறுதியாக 8 ஆவது மாவட்டமாக, நாகையில் 14ஆவது தேசிய நெல் திருவிழா இன்று (ஆக.25) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் தொடங்கி வைத்து பாரம்பரிய நெல் ரகங்களை பார்வையிட்டார்.
அப்போது வாசனை சீரக சம்பா, ஆத்தூர் கிச்சிலி சம்பா, மாப்பிள்ளை சம்பா, காட்டு யானம், தங்க சம்பா, முற்றினசன்னம், சேலம் சன்னா, கருடன் சம்பா, காளான் நமக், உட்பட ஏராளமான நெல் ரகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், "நமது பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும். இதனால் நோய் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியும் " என்றார்.
முன்னதாக விவசாயிகள் பேசுகையில், "27 வகையான ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை மத்திய அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும்.
தமிழ்நாடு அரசு உடனடியாக இயற்கை வேளாண் கொள்கையை கொண்டு வர வேண்டும். பாரம்பரிய நெல் ரகங்களின் பயன்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் நோக்குடன் பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்க தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகம் முன் வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகளுக்கு முன் வைத்தனர்.
நிகழ்ச்சியில் முகக்கவசங்கள் அணிந்தும், தகுந்த இடைவெளி விட்டு அமர்ந்தும் குறைந்த அளவிலான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து விவசாயிகளுக்கும் பாரம்பரிய நெல் ரகங்கள் வழங்கப்பட்டன.