நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள சோழம்பேட்டையில் கி.பி. 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அழகியநாதர் ஆலயம் அமைந்துள்ளது. செங்கல் கட்டடக்கலைக்குச் சான்றாக விளங்கும் இக்கோயில் சோழர் காலத்தில், சோழப்பேரரசி செம்பியன் மாதேவியால் திருப்பணி செய்யப்பட்டது.
இந்த ஆலயத்தில், நாயக்க மன்னர் காலத்தில் எழுப்பப்பட்ட கட்டடங்களும் உள்ளன. சூரிய பகவான், தனக்கு ஏற்பட்ட குலமநோய் நீங்குவதற்கு இங்குள்ள அம்பாளை வழிபாடு செய்து நோய் நீங்கப்பெற்றதாக ஆலய தல வரலாறு கூறுகின்றது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தத் தொன்மைவாய்ந்த ஆலயம் பல ஆண்டுகளாக சிதிலமடைந்து கோபுரங்கள், பக்கவாட்டு சுவர்கள், சுற்றுப்பிரகார மண்டபங்களில் இடியும் தருவாயில் உள்ளது.
வவ்வால் மண்டபத்தின் மேற்கூரையின் ஒருபகுதி சிதிலமடைந்ததால் அங்கு யாரும் செல்லாதவாறு வேலி வைத்து தடுத்துள்ளனர். இந்நிலையில், தினமும் நித்திய கால பூஜைகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. பக்தர்கள் தினந்தோறும் வழிபாடு செய்துவருகின்றனர். மேலும், இந்த ஆலயத்தை புனரமைக்க பொதுமக்கள் கூறிவந்த நிலையில் தொடர்ந்து தற்போது பெய்துவரும் மழையால் நேற்று இரவு சூரிய மண்டபம் இடிந்து விழுந்தது.
கோயிலில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. உடனடியாக கோயிலை புனரமைத்து குடமுழுக்கு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மழைநீரால் சூழ்ந்த சார்ந்தநாதர் கோயில்: பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு!