மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கிளியனூரில் நடைபெற்ற திருமண விழாவில் மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அதன் பின்னர் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, "நான்கு மாநில தேர்தல் முடிவுகள் ஏமாற்றம் அளிக்கிறது. தெலுங்கானா தென்னிந்தியாவில் இருப்பதால் அங்கு மக்கள் வேறு முடிவு எடுத்துள்ளனர். இந்தி பேசும் வட மாநிலங்களில் வாழும் மக்களிடம் சித்தாந்த மாற்றங்கள் ஏற்படாதவரை, இந்தியாவில் மாற்றம் ஏற்படாது.
தோல்விக்கான காரணம் குறித்து காங்கிரஸ் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மத்தியப் பிரதேசத்தில் ஆம் ஆத்மியும், சமாஜ்வாதி கட்சியும் கேட்ட சில தொகுதிகளைக் கொடுத்திருந்தால் அங்கு இந்த தோல்வி காங்கிரசுக்கு ஏற்பட்டிருக்காது. ராஜஸ்தானில் சச்சின் பைலட்டை முன்னிலைப்படுத்தி காங்கிரஸ் களமாடியிருக்க வேண்டும். ராகுல் காந்தியின் நடைப்பயண உழைப்பு வீணாகியுள்ளது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
மக்களவைத் தேர்தலுக்கான செமி ஃபைனல் தேர்தலாகத் தான் இந்த தேர்தலை அனைத்துக் கட்சிகளும் எதிர்கொண்ட நிலையில், இந்த தோல்வி மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்குப் பாதிப்பை ஏற்படுத்திவிடுமோ என்ற கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் தலைமையில் இந்த கூட்டணி போட்டியிடாமல், இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்டிருந்தால் காங்கிரஸுக்கு இந்த தோல்வி ஏற்பட்டிருக்காது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: "சனாதனத்தை எதிர்த்தால் இந்த கதி தான்" - முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத்!