புதுச்சேரி மாநிலம் திருநள்ளாரில் உள்ள உலக பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலம் தர்பாரண்யேஸ்வரர் கோயில். இக்கோயிலில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழா என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இவ்வாண்டு சனிப்பெயர்ச்சி ஜனவரி 24ஆம் தேதியா? அல்லது இவ்வாண்டு டிசம்பர் 27-ஆம் தேதியா? என பக்தர்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதற்கு முக்கிய காரணம் தற்போது வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் ஜனவரி 24-ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறும் என தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இதனால் பக்தர்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திருநள்ளாறு கோயில் தேவஸ்தானம், திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் வாக்கிய பஞ்சாங்கப்படி வருகின்ற டிசம்பர் மாதம் 27ஆம் தேதி அதிகாலை 5.22 மணிக்கு சனி பெயர்ச்சி நிகழ உள்ளது என்றும், இப்பெயற்சியில் ஸ்ரீ சனீஸ்வர பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறார் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆகவே சமூக வலைதளங்களில் திருக்கணித பஞ்சாங்க படி ஜனவரி 24 ஆம் தேதி திருநள்ளாரில் சனிப்பெயர்ச்சி நடைபெறும் என்று வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று திருநள்ளாறு கோவில் தேவஸ்தானம் அந்த அறிவிப்பில் கேட்டுக்கொண்டுள்ளது.
இதையும் படிங்க:தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழா: ஆகம விதிமுறைப்படி நடக்க வாய்ப்பு!