மயிலாடுதுறை முத்துவக்கீல் சாலையில், பெருமாள்சாமி என்பவர் வாடகை இடத்தில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழக அரசின் விலையில்லா பாடப் புத்தகங்கள் பண்டல் பண்டலாக கட்டி குவித்து வைக்கப்பட்டிருப்பதாக வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் மகாராணி தலைமையிலான வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் பழைய இரும்பு கடையில் சோதனை மேற்கொண்டனர். அதில், 2019-20ஆம் கல்வி ஆண்டுக்கான இரண்டாயிரத்து 66 கிலோ எடைகொண்ட 3,134 புத்தகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்தப் பாடப்புத்தகங்கள் அனைத்தும் பறிமுதல்செய்யப்பட்டன.
இதுகுறித்து, மயிலாடுதுறை மாவட்ட கல்வி அலுவலர் ராஜாராமன் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், காவலர்கள் இரும்புக் கடை உரிமையாளர் பெருமாள்சாமியை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர் அளித்த தகவலின்படி, மயிலாடுதுறை கிட்டப்பா மேல்நிலைப்பள்ளியில் உள்ள புத்தக கிடங்கின் பொறுப்பாளர், மயிலாடுதுறை மாவட்ட கல்வி அலுவலகத்தில் பணியாற்றும் இளநிலை உதவியாளர் மேகநாதன் என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில் கடந்த ஆண்டு மயிலாடுதுறை, சீர்காழி தாலுகா பகுதி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட புத்தகங்களில் மீதமுள்ள புத்தகங்கள் மயிலாடுதுறை கிட்டப்பா அரசு மேல்நிலைப்பள்ளி புத்தகக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது. அதை எடுத்து பழைய இரும்பு கடையில் விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, உடனடியாக பழைய இரும்பு கடை உரிமையாளர் பெருமாள்சாமி, மயிலாடுதுறை மாவட்ட கல்வி அலுவலக இளநிலை உதவியாளர் மேகநாதன் ஆகிய இருவர் மீது துரோகம் செய்து அரசு பொருளை விற்பனை செய்தல், உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் ராஜாராமன் கூறுகையில் மாணவர்களுக்கு வழங்க கூடிய பாடப் புத்தகங்களை பழைய இரும்பு கடையில் விற்பனை செய்த இளநிலை உதவியாளர் மேகநாதன் மீது விசாரணை செய்து துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
இதையும் படிங்க: ரேசன் கடை சுண்டலை கடத்த முயன்ற ஊழியர்: பறிமுதல் செய்த கிராம மக்கள்!