மயிலாடுதுறை: தரங்கம்பாடி அருகே பெருமாள்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் பூவரசன். இவருக்குச் சொந்தமான திலகவதி என்ற ஒரு பைபர் படகில் பூவரசன் (25), தென்னரசன் (30), ஆறுமுகம் (60), நிவாஸ் (24), சந்திரபாடியைச் சேர்ந்த அருள்ராஜ் (34), சரத் (32) ஆகிய 6 பேர் கடந்த 12ஆம் தேதி கடலுக்குச் சென்றனர்.
கோடியக்கரையில் இருந்து 20 நாட்டிகள் மையில் வட கிழக்கில் இலங்கை எல்லை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில், நேற்றிரவு (அக்.14) சுமார் 10 மணியளவில் நான்கு படகுகளில் இலங்கையில் இருந்து வந்த மீனவர்கள் பூவரசன் படகு மீது மோதி, வலை மீன்களை அள்ளிச் சென்றனர்.
மேலும், அவர்களை கற்கள், கம்பு, சுலுக்கி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி காயப்படுத்தினர். இந்த திடீர் தாக்குதலால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் அங்கிருந்து தப்பித்து இன்று (அக்.15) அதிகாலை பெருமாள் பேட்டை வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். காயம்பட்ட மீனவர்கள் தரங்கம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தரங்கம்பாடி கடலோர காவல் நிலையம், மற்றும் பொறையார் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: விசாரணைக்கு வந்தால் அடிப்பது வழக்கம் தான்.. சாத்தான் குளம் வழக்கில் தலைமை காவலர் சாட்சியம்..