நாகை மாவட்டம் சீர்காழியிலுள்ள மத்திய கூட்டுறவு வங்கி முன்பு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழ்நாடு கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டுவரும் மத்திய அரசை கண்டித்தும், குறுவை மற்றும் சம்பா சாகுபடி பணியில் ஈடுபடும் அனைத்து விவசாயிகளுக்கும் நிபந்தனையின்றி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலம் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும்.
கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை விவசாயத்துக்கு பெற்றுத்தர வேண்டும், குறுவை தொகுப்புத் திட்டம் உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி முன்பு விவசாயிகள் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சீர்காழி, கொள்ளிடம், ஆச்சாள்புரம், வேட்டங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.