தமிழ்நாடு முழுவதும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 51ஆவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அண்ணாவின் 51ஆவது நினைவு தினத்தையொட்டி அரசியல் கட்சியினர் அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை பேருந்து நிலைய வாயிலில் உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு அதிமுகவினர், மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினர்.
மேலும் திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன் தலைமையில் அண்ணா திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினர்.
இதேபோல், பெரம்பலூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு, பெரம்பலூர் மாவட்ட அதிமுக செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான ராமச்சந்திரன், பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் மாலை அணிவித்து மலர்த் தூவி மரியாதைச் செலுத்தினர்.
அதே போல், திருச்சி மாவட்டம் மேலசிந்தாமணி பகுதியில் உள்ள அண்ணாவின் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் மாநகர் மாவட்டச் செயலாளர் பழனிசாமி தலைமையில் அக்கட்சியினர் திரளாக வந்து சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினர். திமுக சார்பில் திருச்சி கிழக்கு மாவட்டச் செயலாளர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினர்.
அமமுக சார்பில் மாநகர் மாவட்டச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, அரியலூர் மாவட்டத்தில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஜெயங்கொண்டம் சட்டப்பேரவை உறுப்பினர் ராம ஜெயலிங்கம் உள்ளிட்ட ஏராளமான கட்சித் தொண்டர்கள் கலந்துகொண்டு அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினர்.
கரூர் மாவட்டம், பேருந்து நிலையம் அருகிலுள்ள அறிஞர் அண்ணா சிலைக்கு திமுக சார்பாக மாநில நெசவாளர் அணித் தலைவர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து துக்கம் அனுசரிப்பும், திமுக மகளிர் அணி சார்பாக மௌன அஞ்சலியும் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து திராவிடர் கழக மாவட்டத் தலைவர் குமாரசாமி, அறிஞர் அண்ணாவுடைய உருவச் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அதனைத்தொடர்ந்து கரூர் பகுதியில் உழவர் சந்தை அருகில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா சிலைக்கு கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் கீதா, திருச்சி மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் காளியப்பன், முன்னாள் எம்எல்ஏ காமராஜ், அதிமுக நிர்வாகிகள், கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், அதிமுக ஒன்றிய மற்றும் ஊராட்சிக் கழகப் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இவர்களைத் தொடர்ந்து மதிமுக, திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினர்.
முன்னதாக, நாகப்பட்டினத்தில் நடைபெற்ற அனுசரிப்பு விழாவில் அண்ணா சிலையைச் சுற்றி அதிமுக, திமுகவினர் கட்டிய கட்சிக் கொடிகளை காவல்துறையினர் அகற்றக் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: