மயிலாடுதுறை: மயிலாடுதுறையிலிருந்து புதுச்சேரி செல்லும் அரசு பேருந்தை இன்று (ஆக.06) காலை ஓட்டுநர் செந்தில் (40), நடத்துநர் பரசுராமன் (46) ஆகியோர் இயக்கிச் சென்றனர்.
தொடர்ந்து, காலை எட்டு மணியளவில் பொறையாறு பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு, காரைக்கால் நோக்கி புறப்பட்ட பேருந்து, பொறையார் ராஜீவ்புரம் என்ற இடத்தில் சென்றபோது, எஞ்சினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக திடீரென தீப்பற்றி எரிந்தது.
உயிர் தப்பிய பயணிகள்
இதனைக் கண்ட ஓட்டுநர் பாதுகாப்பாக பேருந்தை சாலையோரத்தில் நிறுத்தி, பயணிகள் அனைவரையும் பேருந்தை விட்டு வெளியேற்றியுள்ளார். இதனால் பேருந்தில் பயணித்த 20 பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயம் எதுவும் ஏற்படாமல் உயிர் தப்பினர்.
இது குறித்து தகவல் அறிந்த பொறையார் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அணைத்தனர். இதையடுத்து புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழக அமைச்சர் சந்திர பிரியங்கா, காரைக்கால் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் இது குறித்து பொறையார் காவல் துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அலாஸ்காவில் சுற்றுலாப் பயணிகள் சென்ற விமானம் விபத்து: ஆறு பேர் பலி!