2019-20ஆம் கல்வியாண்டுக்கான விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நாகையில் நடைபெற்றது. தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் இதில் கலந்துகொண்டு பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணியை வழங்கினார்.
நிகழ்ச்சி முடிந்தபின் புறப்படத் தயாரான அமைச்சர் தன் காரில் ஏறினார். அப்போது அங்கு திரண்ட மாணவிகள் சிலர் அமைச்சரின் காரை வழிமறித்தனர். மேலும், தாங்கள் கடந்த கல்வியாண்டில் பயின்ற மாணவிகள் எனவும், தங்களுக்கு மடிக்கணினி வழங்கவில்லை எனவும் தெரிவித்தனர்.
மடிக்கணினி வழங்காமல் கல்வித்துறை அலுவலர்கள் ஏமாற்றுவதாகவும், தங்களுக்கான மடிக்கணினி வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர்.
பின்னர் அமைச்சர் ஓ.எஸ். மணியன், மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததைத் தொடர்ந்து மாணவிகள் கலைந்துசென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.