மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா அனந்தமங்கலம் கிராமத்தில் உள்ளது ராஜகோபாலசுவாமி கோயில். இது அனந்தமங்கலம் ஆஞ்சநேயர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.
இக்கோயில் மகா மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த ராமர், லட்சுமணர், சீதை, அனுமன் ஆகிய 4 ஐம்பொன் சிலைகளை அடையாளம் தெரியாத நபர்கள் பூட்டை உடைத்து 1978 நவம்பர் 23இல் திருடிச் சென்றனர். இச்சம்பவம் குறித்து, கோயில் நிர்வாக அலுவலர் செல்வராஜ் பொறையார் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இவ்வழக்கு 1988 ஜனவரி 25இல் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டதையடுத்து, நாச்சியார்கோயிலைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, கலியன், ராஜேந்திரன் ஆகிய மூவரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.
இந்நிலையில், சிங்கப்பூரில் வசித்துவரும் சிலைகள் மீட்புப் பணிக்குழு அமைப்பைச் சேர்ந்த விஜயகுமாருக்கு பிரிட்டன் தலைநகர் லண்டனைச் சேர்ந்த சிலை விற்பனையாளர் ஒருவர் விற்பனைக்காக சில சிலைகளின் புகைப்படங்களை அளித்துள்ளார்.
அந்தப் புகைப்படங்கள் தமிழ்நாட்டு கோயில்களிலிருந்து திருடப்பட்டது என்பதை அறிந்த விஜயகுமார் அந்தச் சிலைகளின் படத்தினை இணையதளத்தில் வெளியிட்டார். மேலும், அந்தப் புகைப்படங்களை தமிழ்நாடு சிலைகள் கடத்தல்பிரிவு தடுப்புப்பிரிவு காவலர்களுக்கும் அனுப்பிவைத்துள்ளார்.
இதையடுத்து அந்தப் புகைப்படங்கள் அனந்தமங்கலம் கோயிலிலிருந்து திருடப்பட்டது என்பதை உறுதிசெய்த சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர் அதற்கான ஆதாரங்களை பிரிட்டன் அரசுக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
இந்தத் தகவல் அறிந்த அந்த பிரிட்டன் சிலை விற்பனையாளர் மூன்று சிலைகளையும் லண்டன் அலுவலர்களிடம் ஒப்படைத்தார். இதையடுத்து, அச்சிலைகளை தமிழ்நாட்டிற்கு எடுத்துவரும் முயற்சியில் இந்திய தொல்லியல் துறை அலுவலர்கள், காவல் துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.