நாகப்பட்டினம் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 72 ஆயிரத்து 349 பள்ளி மாணவ - மாணவிகளின் விடைத்தாள்கள் திருத்தும் பணி நாளை (மே-27) தொடங்க உள்ளது.
இதையொட்டி இன்று நாகப்பட்டினம் புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளியிலுள்ள விடைத்தாள் திருத்தும் மையத்தினை மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர், கல்வித்துறை அலுவலர்களுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர் பிரவீன் நாயர், ”நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட 7 மையங்களில் நடைபெறும் 12ஆம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணிகளுக்காக முதுகலை ஆசிரியர்கள் ஆயிரத்து 32 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அந்தந்த மையங்களுக்கு செல்வதற்கு ஏதுவாக 13 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும் மையங்கள் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, ஆசிரியர்களுக்கு தெர்மல்மீட்டர் மூலம் நோய்த்தொற்று ஏதாவது ஏற்பட்டுள்ளதா என கண்டறியப்பட்ட பின்னரே அவர்கள் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: அரசு மருத்துவமனையில் மருத்துவம் பார்க்கும் ரோபோக்கள்