தமிழ்நாட்டில் சாத்தான்குளம் பகுதியில் தந்தை, மகன் கைது செய்யப்பட்டு, உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் அதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், பால் முகவர்கள் சங்கம் காவலர்களின் வீடுகளுக்கு பால் விநியோகம் செய்ய மாட்டோம் என அறிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, சாத்தான்குளம் சம்பவத்தை சுட்டிக்காட்டி நாகை துணைக் காவல் கண்காணிப்பாளரின் வாகன ஓட்டுநராகப் பணிபுரியும் காவலர் ரமணன், ஃபேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.
அவரது பதிவில், 'பால் விற்பனையாளர்கள் யாராக இருந்தாலும், வாகனத்தை மறைப்போம், மாஸ்க் இல்லை, ஹெல்மெட் இல்லை, சீட் பெல்ட் அணியவில்லை, போன்ற வழக்குகளைப் பதிவு செய்வோம்' என்று மிரட்டும் தொனியில் செய்துள்ள அவரது ஃபேஸ்புக் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
காவலர் ரமணனின் பதிவிற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், தற்போது நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம், இதுகுறித்து விளக்கம் கேட்டு காவலருக்கு குறிப்பாணை கொடுத்துள்ளார். சாத்தான்குளத்தில் தந்தை, மகன் சந்தேக மரணம் தொடர்பாக மக்கள் காவல் துறை மேல் கடும் அதிருப்தியில் இருக்கும் சூழலில், நாகை காவலரின் ஃபேஸ்புக் பதிவு காவல் துறையினர் மீது மேலும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.