மயிலாடுதுறை தெருவோர வியாபாரிகளிடையே, சுய வேலைவாய்ப்பு, சுய வாழ்வு மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றை மீட்டெடுக்கும் நோக்கில் 2020 ஜூன் 1ஆம் தேதி பிரதமர் ஸ்வநிதி திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டம் மத்திய அரசின் மிக வேகமாக வளர்ந்து வரும் குறு கடன் திட்டங்களில் ஒன்றாகும்.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகராட்சிப் பகுதிகளில் சாலையோரம் தரைக்கடை வைத்துள்ள சிறு வியாபாரிகளுக்கு ஒன்றிய அரசின் திட்டமான பிரதமர் ஸ்வநிதி திட்டத்தின் (pm svanidhi) கீழ் தள்ளுவண்டி இலவசமாக வழங்கப்பட்டது.
இதனால், தரைக் கடை வைத்துள்ள வியாபாரிகள் மழைக்காலம், வெயில் காலத்தில் விற்பனை செய்வதில் தொய்வு இல்லாமல் வியாபாரம் செய்து வருகின்றனர். சிறு வியாபாரிகளுக்கு ஒன்றிய அரசு தள்ளுவண்டிகளை இலவசமாக; ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் ஏழை வியாபாரிகளுக்கு வழங்க உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகராட்சிப் பகுதியில் சாலை ஓரம் தரைக்கடை வைத்துள்ள ஒன்பது வியாபாரிகளுக்கு இன்று (ஜூலை 26) இலவச தள்ளுவண்டிகளை சீர்காழி சட்டப்பேரவை உறுப்பினர் பன்னீர்செல்வம், நகராட்சி தலைவர் துர்கா பரமேஸ்வரி மற்றும் ஆணையர் ஆகியோர் வழங்கினர்.
இந்த வண்டிகளை பெறுவதற்கு நகராட்சி நிர்வாகம், தரைக்கடை வைத்துள்ள வியாபாரிகளிடம் தலா 2ஆயிரம் ரூபாய் கையூட்டாக பெற்றுக் கொண்டு வண்டிகளை வழங்கி உள்ளதாக தரைக்கடை வியாபாரிகள் வேதனையுடன் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் சீர்காழி நகராட்சியில் பல்வேறு முறைகேடு நடைபெறுவதாகவும், நகராட்சி நிர்வாகம் சார்ந்த அனைத்துக்கும் கையூட்டு வாங்குவதாக பொதுமக்கள் பலரும் கூறிவரும் நிலையில், தற்போது இந்த குற்றச்சாட்டு சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், கையூட்டு பெற்ற நகராட்சி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இது தொடர்பாக நகராட்சி ஆணையரை தொடர்பு கொள்ள பலமுறை முயற்சித்தபோதும் அவரின் தொலைபேசி எண் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்ததால், அவர் தரப்பு விளக்கத்தைப் பெற முடியவில்லை.
நகராட்சி ஆணையரின் தொலைபேசி எண் தொடர்ந்து சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ள நிலையில் மக்கள் பொது பிரச்னை தொடர்பாக அவரை எவ்வாறு தொடர்பு கொள்வது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சீர்காழி சட்டப்பேரவை உறுப்பினர், நகராட்சி நகர மன்றத் தலைவர் கையால் வழங்கப்பட்ட வண்டிகளுக்கு கையூட்டு பெற்றது தெரியுமா? அல்லது இந்த கையூட்டு பணத்தில் அவர்களுக்கும் பங்கு உள்ளதா எனப் பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இதையும் படிங்க: காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை போலீஸ் உதவியோடு காரில் கடத்திய பெற்றோர் - குமரியில் நடந்தது என்ன?