மயிலாடுதுறை: சீர்காழியில் கால் அழுகல் நோயால் பாதித்து, தனது இரு கால்களையும் இழக்கும் நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடும் 9ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர், தனது உயிரைக் காப்பற்றுங்கள் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று (டிச.20) கோரிக்கை விடுத்துள்ளார்.
சீர்காழி, பனங்காட்டு தெரு, அம்மன் நகரில் வசித்து வருபவர், கனிமொழி. இவரது கணவர் முத்தழகன் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில், இவர் தனது மகள் அபிநயா(14) உடன் வசித்து வருகிறார். அபிநயா சீர்காழியிலுள்ள ஒரு பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இதனிடையே, இவருக்கு காலில் எஸ்இஎல் என்ற அபூர்வ வகை நோய் (SEL is a rare disease) ஏற்பட்டு இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் (JIPMER Hospital, Pondicherry) சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். பாதிப்புக்குள்ளான இவரின் இரண்டு கால்களையும் அகற்ற வேண்டும் என அங்கு இவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த அவரது தாயார் கனிமொழி செய்தறியாத நிலையில் உள்ளார்.
இதனிடையே மாணவி அபிநயா, தன்னைக் காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்; ஏழ்மையான குடும்பத்தில் பிறந்ததோடு, தந்தையில்லாத தனக்கு உதவி செய்ய வேண்டும் எனவும் முதலமைச்சருக்கு கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில் அண்மையில் கிடைத்த தகவலின் படி, முதலமைச்சரின் உத்தரவின்படி, மாணவி அபிநயாவுக்கு சென்னை அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: விநோத நோயால் அவதியுறும் நபருக்கு குவியும் உதவி!