மயிலாடுதுறை: தமிழகத்தில், சமீப காலங்களில் புதிய கடைகள் திறப்பு விழாவில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில், நிறுவனத்தினர் சலுகைகளை வழங்குவதும், கடை திறப்பு விழாவிற்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்களை அழைப்பதும் வழக்கமாக உள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடை உரிமையாளர்கள், வாடிக்கையாளர்களை கவரும் விதமாக அதிரடி சலுகைகளாக ஒரு சட்டை வாங்கினால் மற்றொரு சட்டை இலவசம், மூன்று சட்டை வாங்கினால் ஒரு சட்டை இலவசம், ஒரு புடவை வாங்கினால் மற்றொரு புடவை இலவசம் என்று கடையை விளம்பரப்படுத்தி விற்பனை செய்வார்கள்.
அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தருமகுளம் கடை வீதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கிளாசிக் மென்ஸ்வேர் என்ற புதிய துணிக்கடை திறப்பு விழா நடைபெற்றது. கடை திறப்பு விழாவில், பாஜக மாவட்ட தலைவர் அகோரம் கலந்து கொண்டு, ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இதையும் படிங்க: தேஜ்; இன்று மதியம் அதிதீவிர புயலாக மாற வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
சீர்காழியில், கிளாசிக் மென்ஸ்வேர் கடை உரிமையாளர் விக்னேஷ் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் 1 ரூபாய்க்கு ஒரு சட்டை வழங்குவதாக விளம்பரம் செய்துள்ளார். விளம்பரத்தை அறிந்த தருமகுளம், பூம்புகார், மேலையூர், வாணகிரி, கீழப்பெரும்பள்ளம், கருவி உள்ளிட்ட சுற்று வட்டாரம் முழுவதும் உள்ள இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடை முன் குவிந்தனர்.
கடை திறப்பு விழாவில் அதிகளவில் பள்ளி செல்லும் மாணவர்கள் குவிந்ததால் ,தருமகுளம் கடைவீதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஒரு ரூபாய் நாணயத்துடன் இளைஞர்கள் நீண்ட வரிசையில் நின்று சட்டை வாங்கிச் சென்றனர்.
இதையும் படிங்க: பெரியகுளம் அம்மா உணவகம் பொருட்கள் வெளிசந்தையில் விற்பனை.. வைரலாகும் வீடியோ!