நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள தனியார் உணவகத்தில் வேலைபார்த்து வந்த தாய்க்குத் துணையாக 16 வயது சிறுமி வேலைக்குச் சென்றுவந்தார்.
அச்சிறுமியிடம், அதே பகுதியைச் சேர்ந்த உணவக உரிமையாளர் சண்முகசுந்தரம், அவரது நண்பர்கள் விஜயன், அரவிந்தன் ஆகியோர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டனர்.
இச்செயலுக்கு அரவிந்தனின் மனைவி துர்காதேவி உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து நான்கு பேர் மீது வேதாரண்யம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி புகார் செய்துள்ளார்.
சிறுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் 4 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்த வேதாரண்யம் காவல் நிலைய காவலர்கள் விஜயன், அரவிந்தன் அவரது மனைவி துர்காதேவி ஆகிய மூன்று பேரை போக்சோ சட்டத்தில் கைதுசெய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர்.
மேலும் முக்கியக் குற்றவாளியான உணவக உரிமையாளர் சண்முகசுந்தரம் தலைமறைவு எனக் காவல் துறை தரப்பில் சொல்லப்படுகிறது.
"சண்முகசுந்தரத்தின் சகோதரர் இளங்கோவன் என்பவர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிகிறார். அவர் காவல் துறை செல்வாக்கைப் பயன்படுத்தியதால், சண்முக சுந்தரத்தை கைதுசெய்யாமல் தலைமறைவு எனக் கூறிவருகின்றனர்.
உடனடியாக சண்முகசுந்தரத்தை கைதுசெய்ய வேண்டும்" என வலியுறுத்தி சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினத்திடம் புகார் மனு அளித்துள்ளனர்.