மயிலாடுதுறை: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (56), சீர்காழியில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த (ஆக.2) ஆம் தேதி சீர்காழிக்கு செல்வதற்காக மன்னார்குடியில் இருந்து பேருந்து மூலம் மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் வந்திறங்கி உள்ளார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்தி சென்றனர்.
கூலிப்படை வைத்து கடத்தல்
பின்னர் திருவாரூர் அருகே கடத்தி சென்றபோது ராஜேந்திரன் சத்தம்போடவே அவரை கத்தியால் குத்திவிட்டு காரில் இருந்து சாலையோரம் தூக்கி வீசி விட்டுச் சென்றுள்ளனர்.
இது குறித்து ராஜேந்திரன் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரில் சொத்துப் பிரச்சினை சம்பந்தமாக உறவினர் இளங்கோவன் என்பவர் கூலிப்படை வைத்து தன்னை கடத்தியதாக தெரிவித்திருந்தார்.
இது குறித்து மயிலாடுதுறை காவல் நிலைய ஆய்வாளர் செல்வம் தலைமையிலான காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
பிடிபட்ட இருவர்
இக்கடத்தல் சம்பந்தமாக கொரடாச்சேரியை சேர்ந்த கார்த்திகேயன்(27), கும்பகோணம் கீழகொட்டையூரை சேர்ந்த ராகுல் (22) ஆகிய இரண்டு பேரை நேற்று (ஆக. 5) காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், சொத்து பிரச்சினை சம்பந்தமாக இளங்கோவன் கடத்த கூறியதாகவும் விக்னேஷ்வரன், பரத், விஷ்ணுராம் ஆகியோருடன் சேர்ந்து கடத்தியது வாக்குமூலம் கொடுத்தனர்.
இதையடுத்து இளங்கோவன் உள்ளிட்ட 6 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருக்கும் இளங்கோவன் உள்ளிட்ட 4 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: கர்நாடகாவிற்கு கடத்த முயன்ற 21 டன் ரேஷன் அரிசி பறிமுதல்