மயிலாடுதுறை: முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்த தினம் அக்டோபர் 15 ஆம் தேதி சர்வதேச மாணவர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக அப்துல் கலாம் பெரும் உந்துகோளாக விளங்கியவர். அவரின், இந்த பங்களிப்பை கவுரவிக்கும் வகையில், 2010ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை அப்துல் கலாம் பிறந்த நாளான அக்டோபர் 15 ஆம் தேதியை "உலக மாணவர் தினம்" என்று அறிவித்தது.
விஞ்ஞானி முதல் குடியரசுத் தலைவர் வரை நாட்டின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பணி இன்றியமையாதது. தமிழ்நாட்டு அரசின் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் இளைஞர்களின் எழுச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. "கனவு காணுங்கள் - கனவுகளிலிருந்து சிந்தனைகள் பிறக்கும் - சிந்தனைகள் செயல்களாகும்" என இளைஞர்களுக்கு என்றும் வழிகாட்டியாகத் திகழும் அப்துல் கலாமின் பிறந்தநாள் நாடு முழுவதும் அக்டோபர் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் கருவாழக்கரை அடுத்த மேலையூரில் அமைந்துள்ள தனியார் பள்ளி ஒன்றில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 92-வது பிறந்த தின விழா இன்று(அக்.14) வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமாக, பள்ளியின் முகப்பில் சந்திராயன்-3 விண்கலத்தின் மாதிரி உருவம் 20 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, விண்கலத்தின் மாதிரி உருவம் அருகே, அப்துல் கலாமின் ஆள் உயர திருவுருவ சிலையும் அமைக்கப்பட்டிருந்தது.
அதற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இன்று (அக்.14) பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மீனா ஏ.பி.ஜே.அப்துல் கலாம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தேசபக்தி உறுதி மொழியை மாணவ மாணவிகள் ஏற்றுக் கொண்டனர்.
இதனையடுத்து மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அண்ணல் அப்துல் கலாம் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர், மாணவ மாணவிகளுக்கு மரக்கன்றுகளை மாவட்ட எஸ்.பி வழங்கினார். தொடர்ந்து சந்திராயன் மூன்று மாதிரிக்கு அருகே நின்று கொண்டிருக்கும் அப்துல் கலாம் சிலை உடன் மாணவ மாணவிகள் குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
இதையும் படிங்க: குடும்பமா? கூகுளா? மைக்ரோசாஃப்ட் துணைத்தலைவரின் சாதனைப் பயணம்..!