மயிலாடுதுறை: நவராத்திரி பண்டிகையின் பத்தாம் நாள் விஜயதசமி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. நெல், பச்சரிசியைக் கொண்டு அட்சரம் எழுதி குழந்தைகள் தங்களின் கல்வியைத் தொடங்குவார்கள். விஜயதசமி நாளில் தொடங்கும் கல்வி, கலைகள் ஆகியவை வெற்றியாக முடியும் என்பது நம்பிக்கையாகும். குழந்தைகளின் கை பிடித்து, பரப்பி வைத்திருக்கும் நெல்லில் 'அ' என்று எழுத கற்றுக் கொடுப்பது வித்யாரம்பம் எனப்படுகிறது.
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். அவ்வாறு மிக முக்கியமாகக் குழந்தைகள் கற்கும் போது முதலில் அரிசி அல்லது நெல்லில் எழுதச் சொல்வது சடங்காகப் பின்பற்றுவது வழக்கம். கல்வியில் மாணவர்கள் தழைத்தோங்கச் சரஸ்வதி கோயில்களில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
அவ்வகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி என பல்வேறு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இன்று கொண்டாட்டத்துடன் நடைபெற்றது. மயிலாடுதுறையில் உள்ள சில்வர் ஜூப்ளி மெட்ரிகுலேஷன் தனியார் மேல்நிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடங்கியது. பள்ளியில் சரஸ்வதி சிலையை வைத்து மாலை அணிவித்து, பழங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வைத்து, மாணவர்கள் நன்கு கல்வி கற்க வேண்டி சிவாச்சாரியார் வேத மந்திரம் ஓதி படையலிட்டு வழிபாடு நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து, பள்ளிக்குச் சேர்க்கைக்கு வந்த குழந்தைகளை அழைத்துப் பெற்றோரின் மடியில் அமர்த்தி ஆசிரியர்கள் குழந்தைகளின் கை பிடித்து, தாம்பாளத்தில் நெல் பரப்பி தமிழின் முதல் எழுத்தான 'அ'கரத்தை மூன்று முறை எழுத கற்றுக் கொடுத்து கல்வியைத் தொடங்கி வைத்தனர். இதனையடுத்து வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் மாணவர் சேர்க்கை முன்னிட்டு பள்ளி நிர்வாகத்தினர் மாணவர்களுக்கு ரெயின் கோட் வழங்கி வரவேற்றனர்.
இதையும் படிங்க: சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை: தருமபுர ஆதீனத்தில் படையலிட்டு சிறப்பு வழிபாடு!