மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேலையூர் சாயாவனம் கோசாம்பிகை உடனாகிய ரத்தின சாயாவனேஸ்வரர் கோயில் காசிக்கு இணையான 6 கோயில்களில் ஒன்றாகும். இக்கோயிலிலுள்ள குழந்தை திருஞானசம்பந்தர் ஐம்பொன் சிலை கடந்த 1965 ஆண்டு திருடு போனது.
இது தொடர்பாக கோயில் நிர்வாகம் பூம்புகார் காவல் நிலையத்தில் புகார் அளித்தது. இந்நிலையில் தமிழ்நாடு அரசின் சிலை கடத்தல் தடுப்பு காவல்துறையினர் மூலம் காணாமல் போன திருஞானசம்பந்தர் சிலை ஆஸ்திரேலியாவில் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, திருஞானசம்பந்தர் சிலை உட்பட 10 சிலைகள் இந்திய வெளியுறவுத்துறை மூலம் மீட்டப்பட்டு டெல்லி கொண்டு வரப்பட்டு டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் சென்னை எடுத்துவரப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு ஞானசம்பந்தர் சிலை மட்டும் கும்பகோணம் சிறப்பு தனி நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் (ஜூன்.9) இரவு இந்து சமய அறநிலைய இணை ஆணையர் மோகன சுந்தரம் வழி காட்டுதலின் படி திருக்கோயில் செயல் அலுவலர் அன்பரசன் மூலம் சாயாவனம் கோயிலுக்கு திருஞானசம்பந்தர் சிலை கொண்டுவரப்பட்டுச் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டது.
அப்போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்பு திருஞானசம்பந்தர் சிலை பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: வெளிநாடுகளிலிருந்து மீட்கப்பட்ட 10 சாமி சிலைகள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு!