காரைக்கால்: உலகப் புகழ்பெற்ற காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் ஸ்ரீதர்பாரன்யேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு சனி பகவானுக்கு என தனி சன்னதி இருப்பதாலும், ஸ்ரீசனீஸ்வரர் அனுகிரக மூர்த்தியாகவும் அருள்பாலிப்பதால் சிறப்பு வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. இதற்கிடையில், இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சனி பெயர்ச்சியானது நேற்று வெகு விமர்சையாக நடைப்பெற்றது.
அதில் சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாலை 5.20 மணிக்கு பெயர்ச்சி அடைந்தார். முன்னதாக சனி பெயர்ச்சியை முன்னிட்டு அனுக்கிரக மூர்த்தி ஸ்ரீ சனிபகவானுக்கு நல்லெண்ணெய், திரவிய பொடி, மஞ்சள், பால், பன்னீர் உள்ளிட்ட வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. அபிஷேகத்தை தொடர்ந்து ஸ்ரீசனீஸ்வர பகவானுக்கு தங்கக் கவசம் அணிவித்து மகாதீபாராதனை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, ஸ்ரீசனீஸ்வரர் வாக்கிய பஞ்சாங்கப்படி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம்பெயரும் நிகழ்வு நடைபெற்றபோது, சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, வசந்தகால் மண்டபத்தில் தங்கக்கவச அலங்காரத்தில் காட்சியளித்த மூலவர் ஶ்ரீசனீஸ்வரருக்கும், தங்க காக வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர் ஸ்ரீசனி பகவானுக்கும் மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், புதுச்சேரி தலைமைச் செயலாளர் ராஜு வர்மா, தருமபுரம் ஆதீனம் மடாதிபதி 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மனிஷ், குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இதில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சனீஸ்வர பகவானை தரிசனம் செய்தனர். முன்னதாக, புனித தீர்த்தமாக கருதப்படும் நளன் தீர்த்த குளத்தில் புனித நீராடிய விநாயகரை வழிபட்டு, அதனைத் தொடர்ந்து மூலவர் தர்பாரண்யேஸ்வர், பின்னர் அனுகிரக மூர்த்தி சனி பகவானையும் வழிபட்டனர்.
மேலும் தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு டிக்கெட்டுகள் ஆயிரம் ரூபாய், 600 ரூபாய் மற்றும் 300 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டு, பக்தர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. சிறப்பு அபிஷேகத்திற்கு 500 ரூபாய், சிறப்பு சகஸ்ரநாம அர்ச்சனைக்கு 300 ரூபாய், சிறப்பு திலசூரண நைவேத்ய அர்ச்சனைக்கு 300 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்து செல்லும் வகையிலும், காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு 1,500க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஆத்தமித்ரா வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதால், 3 கோபுர வாசல் மற்றும் சிறப்பு தரிசனம் வழி உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட இடங்களில் மெட்டல் டிடெக்டர் சோதனை மூலம் பரிசோதனை செய்தே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
குற்றங்களைத் தடுக்கவும், திருநள்ளாறு கோயில் வளாகம் மற்றும் நகரத்தின் முக்கிய பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு அவை ஒரே இடத்தில் அமைக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்பட்டன.