மயிலாடுதுறை: சீர்காழி அருகே ஐந்தாவது நாளாக தொடரும் மழை 1,500 ஏக்கர் அறுவடைக்குத் தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள், அழுகும்நிலையில் உள்ளதால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா முழுவதும் ஐந்தாவது நாள்களாகத் தொடர்ந்து பெய்துவரும் மழையால், வாய்க்கால் வழிந்தும், பல்வேறு இடங்களில் உடைப்பு ஏற்பட்டும் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது.
இன்று (நவ. 6) காலை முதல் மாவட்டத்தில் மிதமான மழை பெய்துவருகிறது. கொள்ளிடம் அருகே மாதானம், செருகுடி, கண்ணபிராண்டி உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட கிராமத்தில் ஐந்தாவது நாளாக தொடர்ந்து மழை பெய்துவருகிறது.
இதனால், விளைநிலத்தில் வெள்ளம் குளம்போல் தேங்கி நிற்பதால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். மேலும் இங்குள்ள வடிகால், வாய்க்கால்களில் தண்ணீர் வழிந்து விளைநிலத்தில் புகுந்துள்ளது.
இந்தப் பகுதியில் வடிகால் வசதிகள் முறையாகத் தூர்வாரப்படாமல் இருப்பதால், வயல்களில் சூழ்ந்துள்ள தண்ணீர் வடிவதற்கு வழி இல்லாமல் தேங்கியுள்ளது. இதனால் சுமார் 1500 ஏக்கர் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.
அறுவடைக்குத் தயாராக இருக்கும் நெற்பயிர்கள் அழுகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. பாதிப்பு குறித்து அலுவலர்களுக்குத் தகவல் தெரிவித்தும், ஐந்து நாள்களாக இதுவரை யாரும் வந்து பார்க்க வரவில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும், நீரில் மூழ்கிய பயிர்களை கையிலெடுத்து காண்பித்து, அரசு தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கைவைத்துள்ளனர்.