மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அகில பாரத இந்து மகா சபா ஆலய பாதுகாப்பு பிரிவு சார்பாக சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானிய மாவுகளைக் கொண்டு ருத்ர நடராஜ விநாயகர் சிலை செய்யப்பட்டுள்ளது. இந்த சிலையானது காவிரி துலாக்கட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட உள்ளது.
இதற்காக மயிலாடுதுறை அருகே ராதாநல்லூர் கிராமத்தில் விநாயகர் சிலை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்திலேயே முதல் முறையாக காசியில் இருந்து வரவழைக்கப்பட்ட ஐந்து முகம் கொண்ட 10 ஆயிரத்து எட்டு ருத்ராட்சங்களைக் கொண்டு 10 அடி உயரத்தில் ருத்ர நடராஜ விநாயகர் சிலை பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டு வருகிறது.
ஒரு கையில் திரிசூலமும், மறுகையில் உடுக்கையுடன் நின்ற கோலத்தில் நடராஜர் ரூபத்தில் இந்த விநாயகர் சிலையானது செய்யப்பட்டு, ருத்ராட்சங்கள் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ருத்ராட்சங்களைப் பயன்படுத்தினால் மனிதர்கள் செய்யும் பாவத்திலிருந்து மோட்சம் கிடைக்கும் என்பதை மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ருத்ராட்சம் பதிக்கப்பட்ட விநாயகர் சிலை செய்யப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.
மேலும், விநாயகர் விசர்ஜனம் செய்யப்படும்போது ருத்ராட்சங்கள் பிரிக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக அகில பாரத இந்து மகா சபா ஆலய பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்து உள்ளனர். மேலும், இந்த விநாயகர் சிலை மயிலாடுதுறையில் உள்ள உலகப் புகழ் பெற்ற காவிரி துலாக்கட்ட கரையில் பக்தர்கள் வழிபாட்டுக்கு வைக்கப்பட உள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழா இந்தியா முழுவதும் வருகிற 18ஆம் தேதி வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா, உத்தரப்பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இந்த விழாவானது மிகுந்த உற்சாகத்துடன் 10 நாட்களுக்கு மேல் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில்தான் விநாயகர் பிறந்தார் என்பது ஐதீகம். மங்களம், ஞானம், செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தைக் குறிக்கும் விநாயகரை பூஜை அல்லது சடங்குகளுக்கு முன்பாக ஒவ்வொரு வீட்டிலும் வழிபடுவர். விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் பல வண்ணங்களிலும், பல வடிவங்களில், விதவிதமான பொருட்களைக் கொண்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகளும், அதன் தொடர்ச்சியாக விற்பனையும் களை கட்டி வருகிறது.
இதையும் படிங்க:Hitman Records: விமர்சனங்களுக்கு மத்தியில் சாதனை மகுடம் சூடிய ரோகித் சர்மா!!