நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பயிற்சிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், காலாண்டு விடுமுறையைப் பயன்படுத்தி நாகையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம் தஞ்சை கோட்ட பொறுப்பாளர் ஆறுமுகசாமி தலைமையில் ரகசியமாக நடைபெற்றுவருகிறது.
நாகையை அடுத்த வடகுடி பகுதியில் இயங்கிவரும் அமிர்தா வித்யாலயா என்ற தனியார் பள்ளி மைதானத்தில் இன்று காலை ஆறு மணிக்கு தொடங்கிய பயிற்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் சீருடைகளை அணிந்துகொண்டு நடைபெறும் முகாமில் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த விவேக் என்பவர் செய்தியாளர்களைப் படம் பிடிக்கவிடாமல் தகராறில் ஈடுபட்டதுடன் கேமராவைப் பிடுங்கவும் முயற்சி செய்துள்ளார்.
தனியார் பள்ளி வளாகத்தில் இன்றிலிருந்து ஐந்து நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாமிற்கு காவல் துறையில் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பாக எந்த அனுமதியும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், மயிலாடுதுறையில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாமில் கல்வீச்சு போன்ற சம்பவங்கள் நடைபெற்றது போல் இங்கும் நடைபெறுமா என பொதுமக்கள் இடையே பதற்றமான சூழல் நிலவிவருகிறது.