மயிலாடுதுறை: குத்தாலம் தாலுகா வழுவூர் அருகே உள்ள பண்டாரவாடை கலைஞர் நகரை சேர்ந்தவர் தர்மலிங்கம் மகன் கலைவாணன் (40). இவர் மீது 4 கொலை, 7 கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பிரபல ரவுடியான இவர் நேற்று இரவு 8.30 மணியளவில் அவரது வீட்டின் பின்புறம் நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்ததாக கூறப்படுகிறது. அப்போது, எதிர்பாராத விதமாக நாட்டு வெடிகுண்டு வெடித்து கலைவாணனின் இரண்டு கையில் உள்ள 10 விரல்களும் துண்டானது. மேலும், மார்பு, தொடைகளிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு அவரசகால முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவரை தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக பரிந்துரைத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைத்தனர்.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து கலைவாணன் கூறுகையில், "மர்ம நபர்கள் 3 பேர் வீசிய வெடிகுண்டுகளை கையால் பிடித்து அப்புறப்படுத்தியபோது, அவைகள் வெடித்து தனது கை விரல்கள் துண்டானது" என தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து பெரம்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் நடந்த பண்டாரவாடை கிராமத்தில் உள்ள கலைவாணனின் வீட்டில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா நேரில் சென்று விசாரணை நடத்தினார். இந்நிலையில் இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Today Rasi Palan: சிம்ம ராசிக்கு எச்சரிக்கை.. உங்க ராசிக்கான பலன் என்ன?