மயிலாடுதுறை அருகே வழுவூர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் வசந்தா(64). சத்துணவு அமைப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற வசந்தா, கணவர் இறப்புக்குப் பின்னர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். வசந்தாவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் கடந்த சில நாள்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனது மகள் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இதற்கிடையில் பூட்டியிருந்த வசந்தாவின் வீடு திறந்து கிடந்ததைக்கண்ட அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்துபோது வீட்டில் திருடு போயிருப்பது தெரியவந்தது. இதையடுத்து சென்னையில் இருந்த வசந்தாவிற்குத் தகவல் கொடுப்பட்டது.
அத்தகவலின் அடிப்படையில் தனது வீட்டிற்கு சென்று பார்த்தபோது பீரோவிலிருந்த 7 சவரன் நகை, ஒரு கிலோ வெள்ளிப் பொருள்கள், 20 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் 52 அங்குலம் எல்.இ.டி.டிவி ஆகிய பொருள்கள் திருடு போயிருப்பது தெரிய வந்தது. பின்னர் இதுகுறித்து காவல் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்குச் சென்ற பெரம்பூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இதேபோல் கடந்த சில நாள்களுக்கு முன்பு கழனிவாசல் கிராமத்தில் வயதான தம்பதியரைத் தாக்கி நகை பணம் கொள்ளை போனது. தொடர்ந்து கிராமப்புறங்களில் வீடுகளில் தனியாக வசிக்கும் முதியவர்களை நோட்டமிட்டு கொள்ளையடிக்கும் சம்பவம் அதிகரித்துள்ளதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: வரதட்சணை கொடுமை; கணவர் கைது - பெற்றோர் தலைமறைவு!