கஜா புயல் பெரும்பாலான தென்னை மரங்களை வேரோடு பெயர்த்து போட்டு தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்த சுவடுகள் இன்னும் மறையவில்லை. அதற்குள் தென்னை விவசாயிகளுக்கு அடுத்த சோதனை. ஆம். காண்டாமிருக வண்டுகள் தென்னை கன்றுகளைத் தாக்குவதால் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர், தென்னை விவசாயிகள்.
நம் வாழ்வில் பிரிக்க முடியாத வகையில் பிணைந்துவிட்ட மரம், தென்னை. இம்மரத்தின் ஒவ்வொரு பாகமும் ஏதோ ஒரு வகையில் மக்களுக்குப் பயன்படுகிறது. தேங்காயில் உள்ள பருப்பு பச்சையாக இருக்கும்போது சமையலுக்குப் பயன்படுகிறது. காய்ந்தபின் கொப்பரையாக மாறி, எண்ணெய் கொடுக்கிறது. குளிர்ச்சியும், சத்தும் தரும் பானமாக, குளுக்கோஸ் நிறைந்ததாக இளநீர் உள்ளது. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். ஆக, மனிதனுக்கு இயற்கையின் வரம் தென்னை.
காவிரி டெல்டாவின் கடைமடை மாவட்டப்பகுதியாக விளங்குகிறது, நாகப்பட்டினம். காவிரி நீர் சென்று சேராத வானம் பார்த்த பூமியாய் உள்ளது, நாகை மாவட்டத்தின் தெற்குப் பகுதிகள். இந்த பகுதிகளில் குறிப்பாக பிரதாபராமபுரம், காமேஸ்வரம், விழுந்த மாவடி, வேட்டைக்காரனிருப்பு, நாலுவேதபதி, செம்போடை, புஷ்பவனம், வேதாரண்யம் என பல கடலோர கிராமங்களில் தென்னை விவசாயம் தான் பிரதானமானதாகும்.
டெல்டா மாவட்டங்களில் பட்டுக்கோட்டை, பேராவூரணி, முத்துப்பேட்டை வரிசையில் நாகை மாவட்டத்திலும் தென்னை சாகுபடி அதிகளவில் விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாகவும் இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு வீசிய கஜா புயல் நாகைக்கு கடும் சேதத்தை ஏற்படுத்தி, வேதாரண்யத்திற்கு இடையே கரையைக் கடந்தது. இதனால் கடலோரப் பகுதிகளில் இருந்த தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன.
சுமார் 20 முதல் 30 ஆண்டு வயதுடைய மரங்கள் 90 விழுக்காடு சாய்ந்து முற்றிலுமாக அழிந்து விட்டது.இதனால் தென்னையை பிரதான சாகுபடியாக வைத்திருந்த விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார ரீதியாக கிட்டத்தட்ட 20 ஆண்டுகாலம் பின்னோக்கி செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளால் சற்று இயல்பு நிலைக்குத் திரும்பினர், தென்னை விவசாயிகள்.
இதையடுத்து, கஜா புயலால் விழுந்த தென்னை மரங்களை அகற்றிவிட்டு தரமான தென்னங்கன்றுகளை வாங்கி நட்டுப் பராமரித்து வந்தனர், தென்னை விவசாயிகள். தற்போது ஒன்றரை வயது பயிராக உள்ள இந்த தென்னங்கன்றுகளுக்கும் தென்னை விவசாயிகளுக்கும் தற்போது வேறு வகையில் புதிய பிரச்னை எழுந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக 'காண்டாமிருக வண்டு' என்ற புதிய வண்டின் தாக்குதல் கடலோரப் பகுதி தென்னை விவசாயிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. தினமும், இரவு 8 மணிக்கு மேல் வரும் இத்தகைய வண்டுகள் தென்னங்கன்றுகளின் குருத்துப் பகுதிகளுக்குள் சென்று, அவற்றை முழுமையாக அழித்து வருகிறது.
இந்த அபாய வண்டுத் தாக்குதலில் இருந்து தென்னங்கன்றுகளை காப்பாற்ற மரத்தைச் சுற்றிலும் வலைகள் அமைப்பது போன்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் மண்ணுக்கு அடியில் ஊடுருவி வந்து வண்டுகள் தாக்குதல் நடத்துவதால், தென்னை விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.
தற்சமயம் தென்னங்கன்றுகளை காண்டாமிருக வண்டுத் தாக்குதலில் இருந்து காப்பாற்ற சரியான பூச்சி மருந்து இல்லாத நிலையில், தென்னங்கன்றுகளுக்கு அருகில் கூண்டு அமைத்து அதனை உயிருடன் பிடித்து அழிக்கும் தற்காலிக முயற்சிகளை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். எனவே, காண்டாமிருக வண்டுத் தாக்குதலில் இருந்து தென்னங்கன்றுகளை காப்பாற்ற உரிய ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்க வேண்டும் என விவசாயிகள் வேளாண்மைத் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்தில் வெட்டுக்கிளித் தாக்குதல் விவசாயிகளை அச்சுறுத்தி வந்த நிலையில், தற்போது புதிதாக படையெடுத்துள்ள காண்டாமிருக வண்டுகள் விவசாயிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அரசு உரிய நடவடிக்கை எடுத்து அதற்கான தடுப்பு மருந்தை வழங்கி, விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாகவும் உள்ளது.
இதையும் படிங்க: உழவு எந்திரத்தில் கறுப்புக் கொடி கட்டி உழவு - விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயி!