30 ஆண்டுகளாக கோரிக்கை
மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என கடந்த 30 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் அரசுக்குக் கோரிக்கைவைத்தனர். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமாக இருந்த காலம் தொடங்கி மயிலாடுதுறை மாவட்டக் கோரிக்கை மக்களிடையே தொடர்ந்து இருந்துவந்தது. ஆனால், ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து 1991ஆம் ஆண்டு நாகப்பட்டினம் தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்டது.
இதையடுத்து 1997ஆம் ஆண்டு திருவாரூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று மயிலாடுதுறை தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மார்ச் 24ஆம் தேதி விதி எண் 110இன் கீழ் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 7ஆம் தேதி அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. மயிலாடுதுறை மாவட்ட உருவாக்க சிறப்பு அலுவலராக இரா. லலிதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்ரீநாதாவும் ஆகியோர் நியமிக்கப்பட்டு, எல்லை வரையரைப் பணிகள் செய்யப்பட்டு தமிழ்நாடு அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
அதன்படி, நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து உருவாக்கப்படும் இந்தப் புதிய மாவட்டம் மயிலாடுதுறையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், இதன்மூலம் தமிழ்நாட்டிலுள்ள மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 38ஆக அதிகரித்துள்ளது.
எல்லை வரையரைப் பணிகள் நிறைவுற்றதைத் தொடர்ந்து, மயிலாடுதுறை மயூரநாதர்கோயில் தெற்குவீதியில் உள்ள வணிகவரித் துறை அலுவலகத்தில் தற்காலிக மாவட்ட ஆட்சியரகம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தருமபுரம் ஆதீனம் வழங்கிய நிலம்
மயிலாடுதுறை புதிய மாவட்டத்துக்கு ஆட்சியரகம் உள்ளிட்ட நிர்வாகக் கட்டவும், மருத்துவக்கல்லூரி கட்டுவதற்கு அரசு விடுத்த வேண்டுகோளை ஏற்று மன்னம்பந்தலை அடுத்த பால்பண்ணை பகுதியில் தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நிலம் வழங்கியுள்ளார்.
இதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த டிசம்பர் 9ஆம் தேதி ஆதீன திருமடத்துக்கு வந்து நிலம் வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார்.
வேளாண்மையும், மீன்பிடித் தொழிலும்
இந்தப் புதிய மாவட்டத்தின் பிரதான தொழிலாக வேளாண்மையும், மீன்பிடித் தொழிலும் அமைந்துள்ளது. மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 1,172 சதுர கிலோ மீட்டர்கள். இதில் வேளாண்மை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 550 ஏக்கர் சாகுபடி பரப்பில் நடைபெறுகிறது. மேலும், மாவட்டத்தில் பழையார், திருமுல்லைவாசல், பூம்புகார், தரங்கம்பாடி உள்ளிட்ட 26 மீனவ கிராமங்கள் உள்ளன.
இவற்றின் மூலம் நாள் ஒன்றுக்கு பல கோடி ரூபாய் மீன் ஏற்றுமதி நடைபெறுகிறது. மாவட்டத்தின் மொத்த மக்கள்தொகை ஒன்பது லட்சத்து 18 ஆயிரத்து 356 ஆகும். சட்டம் ஒழுங்கை நிர்வகிக்க இரண்டு காவல் துணைக் கண்காணிப்பாளர்களுக்குக் கீழ் 14 காவல் நிலையங்கள், இரண்டு அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அமைந்துள்ளன.
மயிலாடுதுறை மாவட்டம்
நான்கு வருவாய் வட்டங்கள், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகள், ஐந்து ஒன்றியங்கள், இரண்டு நகராட்சிகள், மூன்று பேரூராட்சிகளைக் கொண்ட மயிலாடுதுறையில் சுமார் 10 லட்சம் பேர் வசிக்கின்றனர்.
நாடாளுமன்றத் தொகுதி
- மயிலாடுதுறை
சட்டப்பேரவைத் தொகுதி
- மயிலாடுதுறை
- சீர்காழி
- பூம்புகார்
வருவாய்க் கோட்டம்
- மயிலாடுதுறை
- சீர்காழி
- குத்தாலம்
- தரங்கம்பாடி
நகராட்சி
- சீர்காழி
- மயிலாடுதுறை
பேரூராட்சி
- வைத்தீஸ்வரன் கோவில்
- மணல்மேடு
- குத்தாலம்
- தரங்கம்பாடி
ஊராட்சி ஒன்றியங்கள்
- மயிலாடுதுறை
- சீர்காழி
- கொள்ளிடம்
- செம்பனார்கோவில்
- குத்தாலம்
சுற்றுலாத் தலங்கள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் பூம்புகார், தரங்கம்பாடி ஆகிய புராதன சுற்றுலாத் தலங்களும் அமைந்துள்ளன.
தமிழர்களின் பாரம்பரிய பெருமை
சோழர்களின் தலைநகராகத் திகழ்ந்த நகரம் பூம்புகார். பூம்புகாரின் கடற்கரை சிலப்பதிகார நாயகி கண்ணகிக்கு சிலை அமைந்திருக்கிறது. 1972ஆம் ஆண்டு அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கருணாநிதியால் இது அமைக்கப்பட்டது.
தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை
கி.பி.1620ஆம் ஆண்டு டேனிஷ் நேவி கேப்டன் ரோலண்ட் கிராப், என்பவரால் தரங்கம்பாடி கடற்கரையில் டேனிஷ் கோட்டை கட்டப்பட்டது. தற்போது இந்தக் கோட்டை தமிழ்நாடு அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்தக் கோட்டையில் போர் வீரர்கள் தங்கும் அறை, ஆயுதக்கிடங்கு, சமையல் அறை, அருங்காட்சியகம் உள்ளது. இக்கோட்டையானது இரண்டுமுறை பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ் வளர்த்த மயிலாடுதுறை
கவிச்சக்கரவர்த்தி கம்பர், தமிழின் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரம் நாவலை எழுதிய கவிஞர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை, நூலகத் தந்தை சீர்காழி ரெங்கநாதன் வாழ்ந்து மறைந்த பெருமைகொண்ட ஊர் மயிலாடுதுறை.
புராண வரலாறு கொண்ட 100-க்கும் மேற்பட்ட ஆலயங்கள், பூம்புகார், தரங்கம்பாடி போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்கச் சுற்றுலாப் பகுதிகளை அருகே கொண்ட ஊர் என்னும் பெருமையைப் பெற்றது ’மயிலாடுதுறை’.
திருத்தலங்கள்
மயிலாடுதுறையில் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள், திவ்ய தேசங்கள் உள்ளிட்ட ஏராளமான கோயில்கள் நிறைந்த ஆன்மிக மாவட்டமாகவும் திகழ்கிறது.
மயிலாடுதுறை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய மயிலாடுதுறை மாவட்ட உதயம் அனைத்து தரப்பினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டின் 38ஆவது மாவட்டமாக உதயமானது மயிலாடுதுறை!