மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமி ஒருவர், மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதனை அடுத்து செம்பனார்கோவில் போலீசார், இயற்கைக்கு மாறான மரணமாக வழக்குப் பதிவு செய்தனர்.
அதனை அடுத்து, அச்சிறுமியின் உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தனர். பின்னர் சிறுமியின் உடலைக் கைப்பற்றி, உடற்கூராய்விற்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பரிசோதனையில், சிறுமி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வலிப்பு ஏற்பட்டதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்றும், சிறுமியின் உடல் பாகங்களைப் பரிசோதனை செய்ததில், பலமுறை பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாகவும் உடற்கூராய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர் இந்த வழக்கு தொடர்பாக, சிறுமியின் உறவினர்கள் 15 பேருக்கு மரபனு சோதனை செய்யப்பட்ட நிலையில், தற்போது வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி, சிறுமி மரணமடைந்த வழக்கை போக்சோ வழக்காக மாற்றி, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி, நாம் மக்கள் இயக்க தலைவரும், வழக்கறிஞருமான சங்கமித்திரன் என்பவர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துளார்.
அதில், “காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த சிறுமி, கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி இரவு திடீரென வலிப்பு ஏற்பட்டதை அடுத்து, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்துவிட்டார். அக்டோபர் 2ஆம் தேதி சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் 174 என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
அச்சிறுமியை தினமும், அவளது தந்தை வீட்டிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு மெட்ரிக் பள்ளியில் பைக்கில் கொண்டுபோய் விட்டு வந்துள்ளார். பின்னர், மாலை நேரத்தில் சிறுமியின் தந்தை அல்லது அவரது மாமா வீட்டுக்கு அழைத்து வருவது வழக்கம். அந்த சிறுமி அவளது வீட்டில் இருப்பதைவிட, அவரது உறவினர்கள் வீட்டில்தான் அதிக நேரம் இருப்பாள்" எனக் குறிப்பிட்டு இருந்தார்.
மேலும், இது குறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “சிறுமியின் உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு ஏற்பட்டு இருந்ததாக தெரிவித்துள்ளனர். ஆனால், இதுவரையிலும் போலீசார் ஏன் போக்சோ வழக்காக மாற்றாமல் காலம் தாழ்த்துகின்றனர்?
தனக்கு நடந்த கொடுமையை எடுத்துக்கூற அச்சிறுமி இன்றைக்கு உயிருடன் இல்லை. ஆனால், தற்போது பெரிய அளவில் பணம் கைமாற்றம் செய்யப்பட்டு, வழக்கு மூடப்படுவதாக கூறப்படுகிறது. எனவே, இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்து, அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும், சிறுமியின் இறப்பிற்கு உரிய நீதி கிடைக்கப்பட வேண்டும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: 3 ஆண்டுகளாக இருசக்கர வாகனத்தில் குடிநீர் விநியோகமா? மதுரையில் நடந்தது என்ன?