மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் கி.பி. 1620ஆம் ஆண்டு டேனிஷ் நேவி கேப்டன் ரோலண்ட் கிராப் என்பவரால் தரங்கம்பாடி கடற்கரையில் உலகப் புகழ்பெற்ற டேனிஷ் கோட்டை கட்டப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பின்னர் 1978ஆம் ஆண்டுமுதல் தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத் துறையின் கட்டுபாட்டுக்கு மாறியது.
2002ஆம் ஆண்டு டென்மார்க் அரசு ஒத்துழைப்புடன், டென்மார்க் நாட்டில் உள்ள தரங்கம்பாடி நலச்சங்கம் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையுடன் இணைந்து டேனிஷ் கோட்டை புதுப்பிக்கப்பட்டது.
2011ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் பழமை மாறாமல் இரண்டாவது முறையாகப் புதுப்பிக்கப்பட்டது. கோட்டையின் உள்ளே அருங்காட்சியகமும் உள்ளது. டேனிஷ் காலத்தில் கோட்டைக்குள் கடல்நீர் புகாத வண்ணம் செங்கல் சுண்ணாம்பால் தடுப்புச் சுவர்களை எழுப்பி இருந்தனர்.
அந்தச் சுவர் கடல் அரிப்பால் அடித்துச் செல்லப்பட்டது. இந்நிலையில், நிவர் புயல் காரணமாக கடல் அரிப்பு அதிகமாகி கோட்டையின் பிரதான சுவரைச் சுற்றி அமைக்கப்பட்ட முள்வேலி தடுப்பு பாதிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், 'புரெவி' புயல், கடல் சீற்றம், கடல் அரிப்பால் முள்வேலி இடிந்து விழுந்துள்ளது. கோட்டையின் பிரதான மதில் சுவரை கடல் அரிப்பு நெருங்கியுள்ளது. உடனடியாக கோட்டையை பாதுகாக்க கருங்கற்கலால் ஆன அலைத்தடுப்புச் சுவர் அமைத்து கோட்டையைப் பாதுகாக்க வேண்டுமென தமிழ்நாடு அரசுக்குப் பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா சூழல்: வெறிச்சோடியது தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை