தமிழ்நாட்டின் 38ஆவது மாவட்டமாக கடந்த மார்ச் மாதம் மயிலாடுதுறை மாவட்டமாக அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. இதனையடுத்து, மயிலாடுதுறை மாவட்டத்தின் எல்லைகளை வரைய செய்ய மாவட்ட சிறப்பு அலுவலராக மாவட்ட ஆட்சியர் லலிதா, காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா ஐபிஎஸ், ஆகியோர் நியமிக்கப்பட்டு எல்லை வரையரை பணிகள் முடிவடைந்துள்ளன.
ஆனாலும் புதிய மாவட்டம் தொடங்கப்படாமல் தமிழ்நாடு அரசு தாமதம் செய்வதாக மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர் கூட்டமைப்பினர் குற்றமஞ்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து மயிலாடுதுறையில் வழக்கறிஞர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சேயோன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "புரெவி புயல் பாதிப்புகளை பார்வையிட்ட முதலமைச்சர் மயிலாடுதுறை மாவட்டம் தொடங்குவது குறித்து எதுவும் தெரிவிக்காமல் சென்றுவிட்டார். வருகின்ற ஜனவரி 20ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
அதன் பின்னர் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டால் மயிலாடுதுறை மாவட்டம் பொதுமக்களின் கனவாகிவிடும். எனவே உடனடியாக ஜனவரி முதல் வாரத்திற்குள் மயிலாடுதுறை மாவட்டத்தை செயல்பாட்டுக்கு தொடங்கி வைக்க வேண்டும். இல்லையென்றால் மயிலாடுதுறை மாவட்ட மக்களின் போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும்" என எச்சரித்தார்.
இதையும் படிங்க: பாமக நிர்வாகி பேருந்து மோதி உயிரிழப்பு - பேருந்தை தீயிட்டுக் கொளுத்திய ஊர் மக்கள்!