மயிலாடுதுறை அருகே முட்டம் கிராமத்தில் பழைமை வாய்ந்த மஹாபலீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. மூன்றடி நிலம் கேட்டு விண்ணையும், மண்ணையும் பாதத்தால் அளந்த மகாவிஷ்ணு மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அடக்கினார். அதன் பின், ஐஸ்வர்யங்களை இழந்த மகாபலி சக்கரவர்த்தி சிவவழிபாடு செய்து வந்தார்.
அதன் ஒருபகுதியாக மயிலாடுதுறையை அடுத்த முட்டம் கிராமத்தில் அமைந்துள்ள பெரியநாயகி சமேத சுயம்பு மஹாபலீஸ்வரர் கோயிலில் மகாபலி சக்கரவர்த்தி வழிபாடு செய்து இழந்த ஐஸ்வர்யங்களை மீட்டதாக புராண வரலாறு கூறுகிறது. 3000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த கோயில் திருவாவடுதுறை ஆதீனம் கட்டுப்பாட்டில் உள்ளது.
இக்கோயில் சிதிலமடைந்து தற்போது ஒரு கீற்றுக் கொட்டகையில் சுவாமி, அம்பாள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்து மகாசபா ஆலய பாதுகாப்பு பிரிவு மற்றும் கிராம மக்கள் சார்பில் கோயில் திருப்பணி செய்ய திட்டமிடப்பட்டு திருப்பணி தொடக்க விழா நடந்தது. அதனையொட்டி 8-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை பஞ்சாட்சரம் ஹோமம் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து நேற்று (ஜூன்.9) பூர்ணாகுதி நடைபெற்று கடங்கள் புறப்பட்டு திருப்பணி தொடங்கப்பட்டது. திருவாவடுதுறை ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீமத் வேலப்ப தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் திருப்பணி தொடங்கியது. பழைமை வாய்ந்த இக்கோயிலில் விரைவில் திருப்பணி நடத்தப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.