மயிலாடுதுறை: தவறான சிகிச்சையால் கர்ப்பிணி உயிரிழந்ததாக போராட்டம் நடத்திய உறவினர்கள், மார்க்சிஸ்ட் (லெனினிஸ்ட்) கட்சியினரிடம் அரசு அலுவலர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர்.
மேலசித்தர்காட்டை சேர்ந்த இளையராஜா என்பவரது மனைவி ராஜகுமாரி(23). இவர் பிரசவத்திற்காக கடந்த மே 22ஆம் தேதி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. ராஜகுமாரி சுயநினைவிற்கு வராமல் உடல்நிலை மோசமானதால் அவரை மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் (மே.29) ராஜகுமாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் முறையாக சிகிச்சை அளிக்காததால் அவர் இறந்ததாக அவரது மாமியார் ரேவதி மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று (மே.30) மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் குணசேகரன், ராஜகுமாரியின் உறவினர்கள், தவறாக சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள் மீது பொது விசாரணை நடத்த வேண்டும், இறந்தவர் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும் என முற்றுகை போராட்டம் நடத்த பேரணியாக மருத்துவமனை நோக்கி வந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த ஆர்.டி.ஒ.பாலாஜி, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மாவட்ட ஆட்சியரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: ஆவின் பால் பாக்கெட்டுகள் திருடிய ரவுடி சிறையிலடைப்பு!